வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வடமதுரை: வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள்- செவிலியர்களை நியமித்து கூடுதல் கட்டிடங்கள், படுக்கை, ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தி தந்து அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, வளர்ந்து வரும் நகராகும். வடமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள் என அன்றாட வருமானம் உள்ளவர்களே பெரும்பாலானோர் உள்ளனர். இவர்கள் உடல் நலக்குறைவு ஏதும் ஏற்பட்டால் மருத்துவ சேவை பெற வடமதுரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வருகின்றனர்.

இங்கு வடமதுரையை சுற்றியுள்ள குளத்தூர், பாடியூர், வேல்வார்கோட்டை, வெள்ளப்பொம்மன்பட்டி, கொசவபட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 400 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். தவிர, இந்த நிலையத்தின் கட்டுப்பாட்டில் பிலாத்து, காணப்பாடி, அய்யலூர் சுகாதார நிலையங்கள் உள்ளது. இங்கிருந்தும் சில சமயம் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவம், ஆபரேஷன் என மாதத்திற்கு 20 பிரசவங்கள் வரை நடக்கிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவில் வந்தால் முதலுதவி மட்டும்

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 மருத்துவர் பணியிடம் உள்ளது. இதில் ஒரு ஆண் மருத்துவர் மட்டுமே உள்ளார். அதுவும் பகலில் மட்டும்தான். இதனால் இரவு நேரங்களில் பாம்பு கடி, எதிர்பாராத விபத்து என அவசர காலங்களில் சிகிச்சை பெற வருபவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. பெண் மருத்துவர்கள் மகப்பேறு விடுப்பில் சென்று விட்டதால் பெண்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது வடமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கோ அனுப்பும் நிலை உள்ளது. இதேபோல் செவிலியர்கள் பணியிடமும் பற்றாக்குறையாக உள்ளது.

பழுதாகி கிடக்கும் எக்ஸ்ரே மிஷின்

இங்குள்ள எக்ஸ்ரே பிரிவில் மிஷின் பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை. மேலும் இங்கு எக்ஸ்ரே எடுப்பவர் பணியிடமும் காலியாக உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கென 108 ஆம்புலன்ஸ் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் நான்கு வழி சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை பெற வேடசந்தூரில் உள்ள ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் காலதாமதம் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள்- செவிலியர்களை நியமித்து கூடுதல் கட்டிடங்கள், படுக்கை, ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தி தந்து அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை