வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு

கடலூர்: வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற 15 வயது மாணவன் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை நேரம் பள்ளியில் விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வந்தன.

ஏற்கனவே சிலம்பம் பயிற்சியில் பல்வேறு பதக்கங்கள் மற்றும் சாதனைகள் புரிந்துள்ள மாணவர் ஈட்டி எறியும் பயிற்சியில் கடந்த 24ம் தேதி ஈடுபட்டுள்ளார். அப்போது அதே திடலில் மறு முனையில் ஈட்டி எறியும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் மாணவர் கிஷோர் விழுந்த ஈட்டியை எடுக்க சென்ற நேரத்தில் மற்றொரு மாணவர் ஈட்டியை வீச அந்த ஈட்டி கிஷோரின் தலையில் பாய்ந்தது. தலையில் ஈட்டி பாய்ந்த மாணவனை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் அங்கிருந்து விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷோர் மூளை சாவு அடைந்து விட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் காரணமாக அவர் உயிர்பிழைக்க மாட்டார் என்றும் மூளை சாவு அடைந்து விட்டதால் அவர் கோமா நிலையில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை கேட்டு அங்கிருந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை அறிந்த அவரது தாய் உடனடியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் கிஷோர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கான பரிசோதனை மேற்கொண்டபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாணவர் உயிரிழப்பு காரணம் பள்ளி நிர்வாகம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு இல்லாமல் பள்ளியில் ஈட்டி பயிற்சி அளித்தபோது மாணவர் கிஷோர் படுகாயமடைந்து உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது