பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம்.. வாச்சாத்தி வழக்கு தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு.!!

சென்னை: வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் நடந்த வன்கொடுமை வழக்கில் தருமபுரி நீதிமன்றம் 215 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பி.வேல்முருகன், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். அதில் போலீஸ், வனத்துறையினரால் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மன்னிக்கவே முடியாத பெருங்குற்றம். வாச்சாத்தியே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்; மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம். அன்றைய அதிமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது. இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டோரின் வலியை குறைக்காது; எனினும் நடந்து முடிந்த நிலையில் இது தவிர்க்க இயலாது. விசாரணையை சரிவர நடத்திய சிபிஐக்கும், வழிகாட்டும் தீர்ப்பை வழங்கிய நீதித்துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள். பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம். என்று அவர் கூறினார்.

 

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு