இடத்தை காலி செய்த யானைக் கூட்டம் சுருளியில் குளிக்க அனுமதி

*சுற்றுலாப் பயணிகள் குஷி

கம்பம் : சுருளி அருவி பாதையில் முகாமிட்டிருந்த யானைகள் இடம்பெயர்ந்து சென்றதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரசித்திபெற்ற சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய தலமாகவும் திகழ்கிறது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இந்த அருவிக்கு ஹைவேவிஸ் தூவானம் அணை, ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து வந்தனர்.

இதற்கிடையே, சுருளி அருவி பாலம் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் காட்டுயானைகள் முகாமிட்டிருந்தன. இதையடுத்து அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் யானைகள் நேற்றுகாலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றன. இதை வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் உறுதி செய்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல கம்பம் கிழக்கு வனத்துறையினர் நேற்று அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது

பாக்கு தோப்பில் முகாமிட்ட யானைகள் டிரோனில் கண்காணித்து விரட்டியடிப்பு