உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவாகி உள்ளார். ஆசிரமத்தில் காவலர்கள் சோதனை நடத்திய நிலையில் பாபா நாராயணன் ஹரி இல்லை. சாமியார் எங்கே பதுங்கியுள்ளார் என உத்தரபிரதேச காவல்துறை தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபா எனும் சாமியாரின் மடம் அமைந்துள்ளது. அனைத்து மக்களாலும் போலே பாபா என்று அழைக்கப்படும் அவரது மடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் மனிதநேய மங்கள சந்திப்பு என்ற பெயரில் நேற்று சொற்பொழிவு நடைபெற்றது.

இதில், ஹத்ராசை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். சுமார் 1.25லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக பலர் மூச்சுத்திணறி பலியாகினர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணக்கை தற்போது வரை 121ஆக உள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நாட்டையே உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவத்தில் தொடர்புடைய மத போதகர் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் ‘போலா பாபா’ தலைமறைவாகியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய பலர் தலைமறைவாகி இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் பல பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க மத போதகராக வலம்வந்து போலா பாபா, அம்மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியாற்றி 1990-ல் விடுப்பு ஓய்வு பெற்றபின், சாமியாராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாமியாரை தேடும் பணிகளை முடுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு