உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது: வீடியோ வெளியிட்ட போலே பாபா சாமியார்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ந் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதில் நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் போலீசார் உள்ளிட்ட மாநில அரசு அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பதாக அவர் கூறினார். மேலும், ராஜஸ்தான், அரியானா ஆகிய வெளிமாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சாமியார் போலே பாபா பெயர், வழக்கில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அவர் தலைமறைவாகி விட்டார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.எனவே, அவரையும் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களிலும் தேடி வருவதாக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே சாமியார் போலே பாபா வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது தயவு செய்து நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்ப முடியாது என நான் நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கும்படி என் குழு உறுப்பினர்களை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு