மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் காலை முதல் வழிபட்டு வந்த நிலையில் இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்த உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மேடையில் ஜகத் ஜனனி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அச்சமயம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் தமிழக அரசின் சார்பால் இயக்கப்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது