ஊத்துக்கோட்டையில் அடிதடியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: வீடியோ எதிரொலியால் டிஎஸ்பி அதிரடி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், அரசு பள்ளி மாணவர்கள் பஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், டிஎஸ்பி தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி ஆந்திர மாநிலம் தாசுகுப்பம், புதுகுப்பம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளி முடிந்ததும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் அவர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் ஒருவொருக்கொருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இச்சம்பவம் ஊத்துக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொறுப்பு டிஎஸ்பி லட்சுமி பிரியா பங்கேற்று பேசியதாவது: ஊத்துக்கோட்டை பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வருகிறது. அதை விற்பனை செய்வது யாரென்று கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வருகிறோம். பான்பராக், குட்கா, ஹான்ஸ், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது. போதைப்பொருட்களை யாராவது விற்பனை செய்தால் காவல் நிலையத்தில் மாணவர்களே தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், நம்பர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

மேலும், மாணவர்களாகிய நீங்கள் மாதா, பிதா, குரு ஆகியோருக்கு மதிப்பளிக்க வேண்டும். உங்களுடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அவர்கள் மட்டும் தான். மேலும், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பஸ் நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, இனி இது போன்று சண்டை போடுவதாக தகவல் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். அப்போது, இன்ஸ்பெக்டர்கள் தமிழ் செல்வி, வெங்கடேசன், எஸ்.ஐ.பிரசன்ன வரதன் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

* பூந்தமல்லியில் கலந்துரையாடல்
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் ஒரு சிலர் பொது இடங்களில் விளையாட்டுத்தனமான சேட்டைகளில் ஈடுபட்டு வந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து பூந்தமல்லி போலீசாரும் அவ்வப்போது மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து கண்டித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் கூறும்போது, பதின் பருவத்தில் ஏற்படும் ஆர்வக்கோளாறால் மாணவர்கள் சிலர் பொதுவெளியில் வரம்பு மீறி நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாணவர்களின் ஒரே நோக்கம் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே பெற்றோர்கள் மாணவர்களை படிக்க அனுப்பி வைக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏராளமான கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பொதுவெளியில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் பயணிகளுக்கு இடையூறு விதமாகவும் சாலைகளிலோ பேருந்துகளிலோ ஆட்டம், பாட்டம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இது போன்று செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும் என கூறினார்.

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை