Wednesday, September 18, 2024
Home » அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

by Karthik Yash

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பயணம், தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக அமைந்ததாக அவர் பெருமிதத்துடன் கூறினார். இந்த பயணத்தில் 19 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி விஷயத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.

அவருடன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட சிலரும் சென்றனர். அங்கு சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் 14 நாட்கள் தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க வரும்படி முதலீட்டாளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். முதல்வரின் அமெரிக்கா பயணத்தின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.7,616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வர உள்ளது. இதன்மூலம் 11,516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

அமெரிக்க பயணத்தின்போது, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலைநகரில் உள்ள கார் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 12ம் தேதியுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து துபாய் வழியாக சென்னை திரும்பினார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கினார்.

அவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கூடி வரவேற்றனர். இதேபோன்று தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரை சாலையின் இரு பக்கமும் கூடி திமுக கொடியை ஏந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்க நாட்டிற்கு சென்று அரசு முறை பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக அமைந்திருக்கிறது. உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை தொடங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்கா சென்றேன்.

கடந்த 12ம் தேதி வரை அங்கே இருந்தேன். இந்த 14 நாட்களும் மிக பெரிய பயனுள்ளதாக இந்த பயணம் அமைந்திருந்தது. உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். இதில் 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்களாகும். இந்த சந்திப்புகளின்போது, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. குறிப்பாக, சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.7 ஆயிரத்து 616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. இதன்மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த மாதம் 29ம் தேதியன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் பங்கேற்றார்கள். தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம், சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் கமிட்டி அமைத்து, உறுப்பினர்களுடன் பேசிவிட்டு சொல்கிறோம் என்றார்கள். எங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவித்த காரணத்தினால் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்கள் செல்லுங்கள், 2 நாட்களுக்கு பிறகு அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

நாங்கள் சிகாகோ விமான நிலையத்தில் விமானத்தில் உட்கார்ந்த பிறகு அறிவித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க ஆணையிட்டிருக்கிறேன். அதேபோல, எனது கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு, அதன்மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தவிர, ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டி தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், தொழில் தொடங்குவதற்கும், வணிகம் புரிவதற்கும் உகந்த சூழ்நிலை நிலவுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலும், கடந்த 7ம் தேதி சிகாகோ நகரிலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் நான் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழ் அமைப்புகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால், புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் உங்கள் கோரிக்கைக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

அதைப்போல, மெட்ரோ ரயில் திட்டம் இரண்டிற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை இதுவரைக்கும் கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் கூட ஒன்றிய நிதி அமைச்சர் கடனுதவி பெற்று கொடுத்தோம் என்று விளக்கியிருந்தார். ஆனால், ஒன்றிய அரசின் பங்களிப்பை கொடுக்கவில்லை. இந்த 2 பெரும் நிதி தேவை என்று வலியுறுத்தி பிரதமரை நீங்கள் சந்தித்து வலியுறுத்துவீர்களா? நிச்சயமாக, உறுதியாக.. மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், பள்ளி கல்வித்துறையின் நிதிக்கு புதிய கல்வி கொள்கை ஏற்றுக்கொள்வது குறித்தும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமரிடத்தில் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின்போது எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு இருக்கிறதா? குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் அமெரிக்க பயணத்தின்போது ரூ.25 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் குறைந்த அளவு முதலீடுகள் தான் இந்த அமெரிக்கா பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அது எல்லாம் அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படக்கூடிய விஷயங்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீடுகள் வந்திருக்கிறது. உறுதியோடு வரக்கூடிய முதலீடுகள் தான் வந்திருக்கிறது. அதில் எந்தவித சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்க பயணம் வெற்றி என்று சொல்கிறீர்கள். அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அவர்கள் ஈர்த்த முதலீடுகளை விட இது மிகவும் குறைவாக இருக்கிறது. வெறும் 7000 கோடி முதலீடு என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அப்படியில்லை. அவர்கள் மாநிலத்திற்கானதை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதுபோல நாங்களும் நம்முடைய மாநிலத்திற்கு என்னென்ன வேண்டுமோ, என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம். அதிமுக காலத்தில் 10% கூட முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை, நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ரூ.7000 கோடி முதலீடுகள் எப்படி சிறப்பாக செயல்படுத்தப்படும்?

ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன்பு விளக்கம் கொடுத்துவிட்டு இதே நிருபர்களிடம் சொல்லிவிட்டு சென்றேன். சம்பந்தப்பட்ட தொழிற்துறை அமைச்சரும் சொல்லியிருக்கிறார். சட்டமன்றத்திலும் இது பதிவாகியிருக்கிறது. ஏற்கனவே எவ்வளவு முதலீடுகள் வந்தது. எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இப்போது வந்திருக்கக்கூடிய முதலீடுகள் 100க்கு 99 என்று கூட சொல்லமாட்டேன். 100க்கு 100 அதை நிறைவேற்றக்கூடிய வகையில்தான் இந்த முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். அதற்கான வேலைவாய்ப்புகளும் விரைவாக உருவாக்கப்படும். அது வருகிறபோது உங்களுக்கு அவ்வப்போது சொல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

* அமைச்சரவை மாற்றம் உறுதி
கேள்வி: அமெரிக்கா பயணத்திற்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லியிருந்தீர்கள். அமைச்சரவை மாற்றத்திற்கான கேள்விக்கு மாற்றம் நிகழுமா? எதிர்பார்க்கலாமா? கூட்டங்களில் தொண்டர்களின் கோரிக்கைகளை தலைமை கழகம் அதை கவனிப்பதாகவும், அதை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். மாற்றம் நிகழுமா?
பதில்: திமுக என்பது சொன்னதைத்தான் செய்யும். சொல்வதைத்தான் செய்வோம். ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன். இன்றைக்கு 75ம் ஆண்டு கொண்டாடக்கூடிய வகையில் திமுக பவள விழா கொண்டாடப்பட இருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.

* விசிக மது ஒழிப்பு மாநாடு
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். நடிகர் விஜய்யும் எங்களுடைய மது ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து? திருமாவளவன் அதற்குரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படக்கூடிய மாநாடு இல்லை. எல்லாவற்றிற்கும் தனிப்பட்ட முறையில் நான் அழைப்பு கொடுத்திருக்கிறேனா? அது பொதுவான விஷயம். இதற்கும், அரசியலுக்கும் முடிச்சுப் போடவேண்டாம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். அதுதான் மறுபடியும் நான் சொல்கிறேன். விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது அரசியல் கலந்த பேசும் பொருளாக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஏதோ ஸ்திரத்தன்மை இல்லையா என்பது போல. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை அவரே தெளிவாக, திருமாவளவன் விளக்கமாக சொல்லியிருக்கிறார். அதற்கு மேல் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் கூறினார்.

* எடப்பாடிக்கு பதில்
முதலீட்டு ஒப்பந்தம், வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக தங்களுடைய கருத்து? அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து விளக்கமாக சொல்லி இருக்கிறேன். தொழில் துறை அமைச்சரும் புள்ளி விவரங்களோடு விளக்கியிருக்கிறார். சட்டமன்றத்தில் தெளிவாக அவர் சொல்லி இருக்கிறார். அதை குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து தெரிந்து கொண்டு சொல்லவேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போனதாக சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் தவிர்த்துவிடுகிறேன் என்று முதல்வர் கூறினார்.

* நிதியமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று
கோவையில் 2 நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு கடினமாக இருக்கும் என்று பேசிய அன்னபூர்ணாவின் உரிமையாளர் அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறாரே? ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை அவர் முன் வைத்தார் என்பதற்காக ஒன்றிய அமைச்சர் கையாண்டவிதம் மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

fifteen + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi