யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையரில் நம்பர் 1 சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் 25 வயதான அரினா சபலென்கா, 6ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 19 வயதான கோகோ காப் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 6-2 என சபலென்கா எளிதாக கைப்பற்றினார்.
ஆனால் 2வது செட்டில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் ஆதிக்கத்தை தொடர்ந்த கோகோ காப் 6-2 என கைப்பற்றினார். முடிவில் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். மேலும் சர்வதேச டென்னிசில் தொடர்ச்சியாக 12வது வெற்றியை பெற்றார்.

பட்டம் வென்ற கோகோ காப்பிற்கு ரூ.24.94 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ரன்னர் சபலென்கா ரூ.12.47 கோடி பரிசாக பெற்றார். கலப்பு இரட்டையரில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா, பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஜோடி 6-3, 6-4 என அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. ஆடவர் ஒற்றையரில் நாளை அதிகாலை நடக்கும் பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்- ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் மோதுகின்றனர்.

Related posts

வண்டலூர் தானியங்கி மழைமானி நிலையத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு

பேருந்திற்காக நின்று கொண்டிருந்த துணை நடிகைக்கு பாலியல் சீண்டல்: வடமாநில வாலிபர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கவுன்சிலர்கள்