அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு ஆதரவாக மேலும் ஒரு குடியரசு கட்சி வேட்பாளர் விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்த ரோன் சான்டிஸ் டிரம்புக்கு ஆதரவாக விலகினார். அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் உள்ளார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ளதால் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. முன்னாள் அதிபர் டிரம்ப்(77), இந்திய வம்சாவளியும் முன்னாள் தெற்கு கரோலினா ஆளுநருமான நிக்கி ஹாலி(51), புளோரிடா ஆளுநர் ரோன் டி சான்டிஸ், தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் களத்தில் இருந்தனர். கடந்த வாரம் அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 51.9 % வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை வகித்தார். புளோரிடா ஆளுநர் ரோன் டி சான்டிஸ் 20.7 % 2ம் இடம் பிடித்தார். நிக்கி ஹேலி 19 % 3வது இடம் பிடித்தார்.விவேக் ராமசாமிக்கு 7.7 % வாக்குகள் கிடைத்தது. இதனால் விவேக் ராமசாமி போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில், ரோன் டிசான்டிஸ்சும் பிரசாரத்தை நிறுத்துவதாகவும் டிரம்புக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,வெற்றிக்கான பாதை தெளிவாக இல்லை என்றால், நன்கொடைகளை வழங்குமாறு ஆதரவாளர்களிடம் என்னால் கேட்க முடியாது. அதன்படி, நான் எனது பிரசாரத்தை நிறுத்துகிறேன் என்று தெரிவித்தார். தற்போது டிரம்புக்கு போட்டியாக நிக்கி ஹாலி மட்டும் களத்தில் இருக்கிறார். நியூஹாம்ஷையரில் நடைபெறும் தேர்தலிலும் டிரம்பே முன்னிலை வகிக்கிறார். இதனால், இந்த தேர்தலிலும் டிரம்ப்- பைடன் இடையே தான் மீண்டும் போட்டி இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!