யுஎஸ் ஓபன் டென்னிஸ் அரையிறுதிகளில் அதிரடி ஆட்டங்கள்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்திய நேரப்படி இன்றும், நாளையும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. முதல் அரையிறுதியில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப்(19வயது, 6து ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை கரோலின் முச்சோவா(27வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோத உள்ளனர். இருவரும் முதல் முறையாக யுஎஸ் ஓபன் அரையிறுதியில் விளையாட உள்ளனர்.

இவர்கள் நேருக்கு நேர் சந்தித்த ஒரே ஒரு ஆட்டத்தையும் காஃப்தான் வென்றுள்ளார். அரினா சபலென்கா(25வயது, 2வது ரேங்க்)-மேடிசன் கீஸ்(28வயது, 17வது ரேங்க்) இருவரும் 2வது அரையிறுதியில் களம் காண உள்ளனர். தரவரிசையில் முதல் இடத்தை உறுதி செய்துள்ள சபலென்கா தொடர்ந்து 3வது முறையாகயும், மேடிசன் 3வது முறையாகவும் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் விளையாட உள்ளனர். இதற்கு முன் இருவரும் மோதிய 3 ஆட்டங்களில் சபெலன்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

ஆடவர் அரையிறுதி: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் இளம் வீரர் பென் ஷெல்டன்(20வயது, 47வது ரேங்க்), முன்னாள் சாம்பியன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்(36வயது, 2வது ரேங்க்) ஆகியோர் மோத உள்ளனர். யுஎஸ் ஓபனில் ஷெல்டன் முதல் முறையாகவும், முன்னணி வீரரான ஜோகோவிச் 13வது முறையாகவும் விளையாடுகின்றனர். அவற்றில் 4 முறை அரையிறுதியுடன் வெளியேறிய ஜோகோவிச் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இரண்டாவது அரையிறுதியில் உலகின் நெம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ்(22வயது, 1வது ரேங்க்), முன்னாள் நெம்பர் ஒன் வீரரான ரஷ்யாவின் டானில் மெத்வதேவ்(27வயது, 3வது ரேங்க்) ஆகியோர் சந்திக்க உள்ளனர். யுஎஸ் ஓபன் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் மெத்வதேவ் 4வது முறையாகவும், நடப்பு சாம்பியனான அல்கராஸ் தொடர்ந்து 2வது முறையாக களம் இறங்க உள்ளனர். தலா ஒரு யுஎஸ் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இருவரும் இதுவரை மோதிய 3 ஆட்டங்களில் அல்கராஸ் 2-1 என்றக் கணக்கில் இப்போதைக்கு முன்னிலையில் உள்ளார். நடப்புத் தொடரில் இதுவரை நடந்த 5 சுற்று ஆட்டங்களிலும், சபலென்கா, முச்சோவா, காஃப், கார்லோஸ், ஜோகோவிச், மெத்வதேவ் ஆகியோர் தங்களை விட தர வரிசயைில் பின் வரிசையில் உள்ள வீராங்கனைகள், வீரர்களை சாய்த்துள்ளனர். ஆனால் மேடிசன், ஷெல்டன் ஆகியோர் மட்டுமே தங்களை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்களை வீழ்த்தி உள்ளார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை