யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையரில் ஜெலீனா, கிச்செனோக் சாம்பியன்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜெலீனா ஒஸ்தபென்கோ மற்றும் லியூடிமைலா கிச்செனோக் இணை ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இன்று நடக்கும் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெகுலா மற்றும் சபலென்கா மல்லுகட்ட உள்ளனர். ஆர்தர் அஷே அரங்கத்தில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் லேட்வியாவின் ஜெலீனா ஒஸ்தபென்கா(27 வயது 14வது ரேங்க்), உக்ரைனின் லியூடிமைலா கிச்செனோக்(32 வயது 17வது ரேங்க்) ஜோடி சீனாவின் சாங் ஷாய்(35 வயது 62வது ரேங்க்), பிரான்சின் கிரிஸ்டினா லேட்னோவிக்(31 வயது 10வது ரேங்க்) ஜோடியுடன் மோதியது. நடப்பு யூஎஸ் ஓபன் ஒற்றையர் பிரிவில் முதல் ரவுண்டிலேயே முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஒசாகாவுடன் மோதி தோல்வியடைந்த ஒஸ்தபென்கா கோப்பை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கினார்.

அந்த வகையில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒஸ்தபென்கா மற்றும் ஜெலீனா ஜோடி 6-4,6-3 என்ற கணக்கில் சாங் மற்றும் கிரிஸ்டினாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியது. இதே கூட்டணி கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா ஓபனில் இறுதி போட்டி வரை வந்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் சபலென்கா(26 வயது, 2வது ரேங்க்) மற்றும் ஜெசிகா பெகுலா(30 வயது, 6வது ரேங்) மல்லுகட்ட தயாராக உள்ளனர். கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள பெகுலாவும், ஆஸி ஓபன் டென்னிசில் சேம்பியன் பட்டம் வென்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்ற சபலென்காவும் வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இது ஒரு சிறப்பான தொடர்

கோப்பை கைப்பற்றிய பின் ஒஸ்தபென்கா கூறுகையில், ‘‘நாங்கள் மிகச் சிறந்த கூட்டணி. போட்டிகள் நடைபெற்ற இந்த இரண்டு வாரங்களும் என் வாழ்வின் பொன்னான காலங்கள். நாங்கள் வெற்றி பெற வேண்டும் என ஆடவில்லை, தோற்க கூடாது என்றே ஆடினோம். அதன்படி ஒவ்வொரு செட்டிலும் சிறப்பாக, இன்னும் சிறப்பாக ஆடியதால் தான் ஒரு செட்டை கூட நாங்கள் தோற்கவில்லை. இது ஒரு சிறப்பான டென்னிஸ் தொடர்’’ என்றனர்.

Related posts

பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது