சிறுநீர்க்கசிவுக்கு ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படுகின்றனர். அதில் முக்கியமாக அதிகம் இன்னல்களை ஏற்படுத்தக்கூடிய ஆனால் அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சனை இருக்குமானால் அது யூரினரி இன்கான்ட்டினன்ஸ் எனப்படும் கட்டுப்பாடற்ற சிறுநீர்க்கசிவு என்னும் நோயாகும்.

கட்டுப்பாடற்ற சிறுநீர்க்கசிவு என்பது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக ஏற்படக்கூடிய சிறுநீர்ப் போக்காகும். இது பெண்களிடம் குறிப்பாக வயதான பெண்களிடம் காணப்படும் ஒரு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய பொதுவான பிரச்சினை என்றால் மிகையாகாது. இதன் ஆரம்ப நிலையில் இருமல் மற்றும் தும்மலின் போது அவ்வப்போது சிறுநீர் போக்கு ஏற்படும். அதுவே தீவிர நிலை அடையும்போது கழிவறைக்குச் செல்வதற்கு கால அவகாசம் கூட கிடைக்காமல், சிறுநீர் வந்துவிடும். கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கானது பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, இளம் பெண்களும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவான காரணங்கள்

சிறுநீர்ப்பையின் உட்புறத்தில் ஏற்படும் அழற்சி.
பக்கவாதம்
புரோஸ்டேட் பிரச்சனைகள்
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பைக் கற்கள்
மலச்சிக்கல்

சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய கட்டி
மதுப்பழக்கம்
சிறுநீர்ப் பாதை தொற்றுகள்
தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது
தசைத் தளர்த்திகள்

பாரமான பொருட்களைத் தூக்குதல்
ஸ்க்ளெரோசிஸ் (Sclerosis) போன்ற நரம்புக் கோளாறுகள்

அறுவை சிகிச்சை செய்யும் போதோ அல்லது வெளிப்புற அதிர்ச்சியினாலோ சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் உண்டாகும் காயம்
மனஅழுத்தம் அல்லது பதற்றம்வகைகள்:

அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ்

எந்த ஒரு வெளிப்படைக் காரணமும் இன்றி திடீரென ஏற்படும் வேட்கையினால் சிறுநீர் அதிகளவில் வெளியேறுவது அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ் ஆகும். முறையற்ற நரம்புத் தூண்டுதலால் சிறுநீர்ப்பையானது முறையின்றி செயல்படுவதே இதற்கு பொதுவான காரணமாகும். சிலருக்கு இந்த பாதிப்பானது மனதளவிலும் காணப்படும். சிறிதளவே தண்ணீர் அருந்தினாலும், தண்ணீரைத் தொட்டாலும், தண்ணீர் பாயும் சத்தம் கேட்டாலும் கூட சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும். சிலருக்கு தூக்கத்திலேயே தன்னிச்சையாக சிறுநீர் அதிகளவில் வெளியேறிவிடும். மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ் , பார்கின்சன் நோய், அல்சீமர் நோய் ஆகிய பாதிப்புகளிலும் இந்த அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ் காணப்படும்.

ஸ்ட்ரெஸ் இன்கான்ட்டினன்ஸ்

உடல் செயல்கள் மற்றும் அசைவுகளில் ஏற்படும் அழுத்தத்தால் சிறுநீர்ப்பையில் இருந்து சிறிதளவு சிறுநீர் வெளியேறும். உதாரணமாக இருமல், தும்மல், சிரித்தல் முதலிய செயல்களின் போதும், ஓடும்போதும், குதிக்கும்போதும் அல்லது பொருட்களைத் தூக்கும்போதும் கூட தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறிவிடும்.

அரிதாக மல்லாக்கப் படுத்த நிலையிலும் தூக்கத்திலும் கூட வெளியேறிவிடும், கர்ப்பகாலங்களில் ஹார்மோன் மாற்றங்களினாலும் உடல் எடை அதிகரிப்பதாலும் இது ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு. குழந்தை பெறுதலின் போதும், மாதவிடாய் நின்ற பின்னரும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் பாதிக்கப்படுவதினாலும் பலவீனம் அடைவதினாலும் கூட இது பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஸ்ட்ரெஸ் இன்கான்ட்டினன்ஸ் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதிகமாகுவதாக பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஓவர் ஆக்டிவ் ப்ளாடர்

அடிக்கடி சிறுநீர் அவசரமாக போகவேண்டிய ஒரு நிலை இது. இதில் அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ் உடைய நோய்க்குறிகளும் காணப்படலாம். பெண்கள் தினமும் சராசரியாக ஏழு முறை சிறுநீர் கழிப்பர். ஆனால் இந்த நிலையில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதன் அறிகுறிகள், ஒரு நாளில் எட்டு முறைக்கு மேல் சிறுநீர் கழித்தல் அல்லது இரவில் இரண்டு முறைக்கு மேல் சிறுநீர் கழித்தல், திடீரென கட்டுப்படுத்த இயலாத சிறுநீர் கழிக்கும் வேட்கை, இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து அவசரமாக சிறுநீர் கழித்தல்.

பங்சனல் இன்கான்ட்டினன்ஸ்

மருத்துவக் காரணங்கள் மற்றும் உடலின் ஒத்துழைப்பின்மையால் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு செல்ல இயலாத நிலையில் ஆகும் கட்டுபாடற்று வெளியேறுவது பங்சனல் இன்கான்ட்டினன்ஸ் ஆகும். வயது முதிர்ந்தவர்களுக்கு உடல் நலமின்றி படுக்கையில் உள்ளவர்களுக்கும் இப்பாதிப்பு காணப்படும்.ஓவர்ப்லோ இன்கான்ட்டினன்ஸ் (Overflow Incontinence) சிறுநீர்ப்பையானது எளிதில் நிரம்புவதால் ஏற்படும் எதிர் பாராத வெளியேற்றம். நரம்புக் கோளாறுகள், சர்க்கரைநோய் மற்றும் சிறுநீர்ப்பை தசைகளின் பலவீனத்தால் இது ஏற்படும்.

கண்டறிதல்

ப்ளாடர் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் (Bladder Stress test): மருத்துவரின் கண்பார்வையில் நோயாளியை பலமாக இருமச்சொல்லி அவருக்கு சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றதா என்று அறிதல்.
யூரின் அனலைஸிஸ் மற்றும் யூரின் கல்சர் (Urine Analysis and Urine Culture): மருத்துவ ஆய்வகத்தில் சிறுநீரைப் பரிசோதித்து அதில் நோய்த் தொற்று அல்லது சிறுநீர் கல் அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்று பரிசோதித்தல்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிஸ்டோஸ்கோபி (Cystoscopy), யூரோடைனமிக்ஸ் முறைகள் மூலமாக சிறுநீரக மண்டலத்திலும் அதைச்சார்ந்த நரம்பு மற்றும் ரத்த ஓட்டத்திலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று பரிசோதித்தல்,

கெகல் (Kegel) உடற்பயிற்சி

கெகல் உடற்பயிற்சி அல்லது இடுப்புப் பகுதிக்கான உடற்பயிற்சியானது இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். இந்த தசைகள் சுருங்கி விரிவதால் சிறுநீர்ப்பையானது சிறுநீரை வெளியேற்றுவதை கட்டுப்படுத்த முடியும். இரண்டு வகையான தசைகள் இடுப்புப் பகுதியில் காணப்படுகிறது.வேகமாக இழுக்கும் தசைநார்கள் – இவை இருமல், தும்மல், சிரித்தலின் போது ஏற்படக்கூடிய சிறுநீர்ப்போக்கினை கட்டுப் படுத்தும்.மெதுவாக இழுக்கும் தசைநார்கள் – இவை சிறுநீர்ப்பாதை யின் முடிவில் உள்ள வால்வு போன்ற அமைப்பைக் கட்டுப்படுத்தும். யூரின் இன்கான்ட்டினன்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் இந்த இரு தசை மண்டலங்களையும் வலுப்படுத்த இந்த கெகல் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

கெகல் பயிற்சி செய்யும் முறை

நீங்கள் சிறுநீர் கழிக்க எந்த தசையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை எப்போதாவது கவனித்தீர்களா? நீங்கள் கெகல் பயிற்சிகளைச் செய்யும்போது வலுப்படுத்தவேண்டிய தசைகள் இவைதான். கெகல் உடற்பயிற்சி செய்ய, உங்கள் தசைகளை சுருக்கி. 10 முதல் 15 விநாடிகள் வைத்திருங்கள். பின்னர் அவைகளை விடுவிக்கவும். இதை ஒரு வேளைக்கு சுமார் 10 முறை மற்றும் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 முறை செய்யவும். ஒவ்வொரு முறையும் பத்து தடவை என, ஒரு நாளைக்கு 30 முறை செய்ய தசைகள் இறுக்கமடைவதை, பயிற்சி செய்பவர்களால் உணர முடியும். இந்தப் பயிற்சியை தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

எளிமையாக இதைக் கூறவேண்டும் என்றால், சிறுநீர் அவசரமாக வரும்போது, கழிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனால் அடக்க முயற்சிப்பது போல் இங்கு செய்ய வேண்டும். ஆனால், சிறுநீர் வரும்போது இந்தப் பயிற்சியைச் செய்யக்கூடாது. சிறுநீர்த்தொற்று உண்டாகும். முழுமையாக சிறுநீர், மலம் கழித்த பிறகே செய்ய வேண்டும்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேதத்தில் கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கானது வாத தோஷம் சீற்றத்தினால் ஏற்படக் கூடியதாக பார்க்கப்படுகின்றது. அதனால் வாத தோஷத்தினை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் பின்பற்ற வேண்டும்.பஞ்சகர்ம சிகிச்சைகளான கசாய வஸ்தி (பீச்சு), அனுவாசன வஸ்தி, உத்தர வஸ்தி, நஸ்யம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
வஸ்தி என்னும் பீச்சு முறையில் ஆசன வாய் வழியாக மருந்துகள் கொடுக்கப்படுவதால் அருகிலிருக்கும் தசைகள், தசைநார்கள் மற்றும் நரம்புகள் பலமடைந்து இந்த இன்கான்ட்டினன்ஸ் பிரச்சனை முற்றிலுமாக குணமடையச் செய்யலாம்.

ஷீரபலா தைலம், தான்வந்திரத் தைலம், சகசராதி தைலட் ஆகியவை அனுவாசன வஸ்திக்கு பயன்படுத்தலாம். லகுபஞ்சமூல ஷீரவஸ்தி அனுபவத்தில் நல்ல பலனை கொடுக்கிறது. நஸ்யம் என்னும் மூக்கு வழியாகக் கொடுக்கப்படும் மருத்துவமுறையில் மூளைக்குப் பலம் சேர்த்து இந்த இன்கான்ட்டினன்ஸ் பிரச்சனையை அணுகலாம். இந்த முறையில் அவபீடன நஸ்யதிற்கு சப்தசார நெய்,ஷீரபலா நெய் ஆகியவை பயன்படுத்தலாம். நாராயண தைலம், ஷீரபலா தைலம் கொண்டு சிரோபிச்சு செய்யலாம்.

அடிவயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் செய்யபடும் பிச்சு சிகிச்சைக்கு தான்வந்திர தைலம், சகசராதி தைலம், பலாஸ்வகந்தாதி தைலம் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். உள் மருந்துகளில், ஷீர கஷாயங்களாக சுகுமாரம், தான்வந்திரம், கஷாயங்களாக த்ருண பஞ்சமூலம், சகசராதி, கல்யாணகம், ப்ருகத்யாதி, வீரதார்வாதி, சப்தசாரம், சிருவில்வாதி ஆகியவை காலை மாலை உணவிற்கு முன் சூரணம் மருந்துகளான, அமுக்கரா, பூனைக்காலி, ஓரிதழ் தாமரை, ஹிங்குவாஷ்டகம், வைஸ்வானரம் ஆகியவையுடன் கொடுக்கலாம். மேலும் குளிகைகளான அம்ருதா குக்குலு, கோக்சூராதி குக்குலு, கற்பூர சிலாசித்து, சந்திர பிரபா வடி, சிவ குடிகா மற்றும் ரச மருந்துகளான அப்ரக செந்தூரம், பூர்ண சந்திரோதய ரசம், வசந்தகுசுமாகர ரசம், ப்ரவாள பிஷ்டி ஆகியவையும் கொடுக்கலாம்.நெய் மருந்துகளான தான்வந்திர க்ருதம், த்ரிகண்டக க்ருதம், கல்யாண க்ருதம், தாடிமாதி க்ருதம், வஸ்த்யாமயந்தக க்ருதம் ஆகியவை பாலுடன் கொடுக்கலாம்.

பின்பற்ற வேண்டியவை

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீர், மலத்தினை அடக்கக்கூடாது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் சிறுநீர் தோற்றுக்கள் வராமலிருக்க தனிப்பட்ட சுகாதாரத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

Related posts

‘’அதிகரிக்கும் குழந்தையின்மை… குறைத்திட எளிய வழிகள்?’’

குழந்தையின்மைக்கு இலவச ஹோமியோபதி மருத்துவம்…

கொழுப்பை குறைப்போம் ஸ்லிம்மாக மாறுவோம்!