தேர்தல் தேதி அறிவிப்பு தெரிந்தவுடன் ரூ1000 கோடி திட்டங்களுக்கு நள்ளிரவில் அவசர ஒப்புதல்: பாஜ அமைச்சர்களின் போலி அறிவிப்புகள் அம்பலம்


புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் தேர்தல் எப்போது என்று மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் அவசர, அவசரமாக கோடிக்கணக்கான திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு ஒன்றிய அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளதாம். அதனால்தான் தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் திட்டங்களை அறிவித்தும், ஒப்புதல் வழங்கியும் வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ெதரிவித்தவுடன் ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி குஜராத், அசாம், கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.1700 கோடிக்கான ஒப்புதலை நேற்று முன்தினம் நள்ளிரவில் வழங்கியுள்ளார். இதேபோல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.925 கோடியை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற செயலாளர் அறிவித்துள்ளார். கப்பல்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் 10 புதிய நீர்வழி தடங்களுக்கான திட்டங்களுக்கு ரூ.645 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த ஒப்புதலும் நேற்று முன்தினம் மாலையில்தான் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

அதன் பிறகு எந்த திட்டங்களை அறிவிக்கவும் முடியாது, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஒப்புதல் எதுவும் செய்ய முடியாது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்டே நிலுவையில் உள்ள திட்டங்களையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் கூட இல்லாத நிலையில் அவசர கதியில் ஒன்றிய அமைச்சர்களால் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நேரத்தில் ஏட்டளவில் திட்டங்களை ஒன்றிய பாஜ அரசு அறிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பாஜ அரசின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்