கடந்த ஆட்சியில் அவசரகதியில் தொடங்கப்பட்ட கால்நடை பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் அவசர கதியில் தொடங்கப்பட்ட சேலம் தலைவாசல் கால்நடைப் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் தலைவாசலில் தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்காவை இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

இந்நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து சில விவரங்களைத் தெரிவிக்கிறேன். சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.

இந்நிலையத்தில் மேற்காள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள் திட்டமிடப்பட்ட 9 வளாகங்களின் கட்டுமானம் மற்றும் மின் இணைப்பு பணிகள் ஆகியவற்றில் 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது. உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.

சரியான திட்டமிடல் இருந்திருந்தால் எதிர்கட்சித்தலைவர் குறிப்பிட்ட காலதாமதத்தை தவிர்த்திருக்கலாம். அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தைத் தொடங்கினார்கள். கால்நடைப் பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.

எனினும் கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்த திட்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கல்லூரி முதல்வர் நிலையில் இயக்குநர் பதவி நிரப்பப்பட்டது.

மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்று வந்த உயர் மின்அழுத்த கம்பிகள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டது. டான்சி நிறுவனம் மூலம் அறையணிகள் கொள்முதல் முடிக்கப்பட்டு அவற்றை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையமும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது