ஆடி பெருக்கை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

போச்சம்பள்ளி : ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலில் இருந்து, தர்மபுரி பிரதான சாலையில் உள்ளது மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு. கரையோரத்தில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆற்றில் புனித நீராடி, இக்கோயிலை வலம் வந்தால் பல்வேறு நன்மை உண்டாகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இதனால் திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கம், அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்பெண்ணையாற்றுக்கு வருகின்றனர். வரும் 3ம் தேதி ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் புனித நீராட வருவார்கள்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து தண்ணீர் வரும் வழியில் உள்ள காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், மருதேரி, மஞ்சமேடு வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்கிறது. இதனால் புனித நீராட வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து நீரை திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக பெய்து வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், கே.ஆர்.பி.அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 309 கனஅடியாக இருந்த நீர்வரத்து 310 கனஅடியாக அதிகரித்துள்ளது. முதல் போக பாசனத்திற்காக இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள், ஊற்று கால்வாய்களில் இருந்து விநாடிக்கு 185 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில், நீர்மட்டம் 50.35 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு