உணவிலும் தீண்டாமையா? மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பட்டியலினத்தவர் சமைத்த உணவை உண்ணக்கூடாது என்று தடுத்து, மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கக் கூடாது. தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முனிய செல்வி என்ற பட்டியலினப் பெண்மணி சமையலராக பணியாற்றி வருகிறார். அவர் சமைத்த உணவை தங்களின் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அறிவித்ததை தொடர்ந்து, அப்பள்ளியில் பெரும்பான்மையான பிள்ளைகள் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து வந்துள்ளனர்.

உணவை சமைத்தவர் பட்டியலினத்தவர் என்பதால், அந்த உணவை சாப்பிடக்கூடாது என்று குழந்தைகளை தடுப்பது மிகக்கொடிய தீண்டாமைக் குற்றம். இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டை தொடர்ந்து இந்த சிக்கலுக்கு முடிவு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கிறது என்றாலும் கூட, உணவில் தீண்டாமை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

பட்டியலினத்தவர் சமைத்த உணவை உண்ணக்கூடாது என்று தடுப்பது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கும் செயல் ஆகும். உணவில் தீண்டாமையை கடைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, கடந்து வந்த பாதையிலேயே திரும்பி பயணிப்பது தான் பிற்போக்கான செயலாகும். இது கடந்த காலங்களில் நாம் போராடி, வென்றெடுத்த சமூகநீதியை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது. எனவே, உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்