அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியங்கள் மூலம் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,664 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,664 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்களின் திறனாய்வு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் இன்று நடந்தது. அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை வகித்தார். தொழிலாளர் ஆணையர் முன்னிலை வகித்தார்.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி வரை மொத்தம் 44,61,486 தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் வாரிய பணிகளான பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதல் மற்றும் ஒப்பளிப்பு செய்து பணப்பயன்களை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்புதல் ஆகிய பணிகள் 40 தொழிலாளர் உதவி ஆணையர்களால் (சமூக பாதுகாப்பு திட்டம்) இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் புதியதாக 16,78,138 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

மேலும், 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.16,64,70,99,480 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 8ம் தேதி அமைச்சர் தலைமையில் பணித்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3,71,922 தொழிலாளர்களுக்கு ரூ.2,16,09,70,623 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிற துறைகளுடன் சரிபார்ப்பு பணிகளுக்காக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களையும், விவரங்களை விரைவில் பெற்று கேட்பு மனுக்களை காலதாமதமின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு