அன்லிமிடெட் சப்பாத்தி – அன்லிமிடெட் டேஸ்ட்!

உழைப்பால் உயர்ந்த உணவகம்

கடந்த சில வருடங்களாக திரும்பும் இடமெல்லாம் வெளிநாட்டு உணவுகளின் ஆதிக்கம்தான். சிறிது நேரத்தில் தயார் செய்து தரப்படும் இந்த மேலை நாட்டு உணவுகளை ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம். ரெகுலராக சாப்பிட முடியுமா என்றால் அது கட்டாயம் முடியாது. ஆனால், நம் ஊரின் இட்லி, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை தினமும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகவும் இவை இருக்கிறது. அப்படி, பலரும் விரும்பக்கூடிய ரெகுலர் டிஷ்களை ஸ்பெஷலாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என பேசத்துவங்கினார் “தி ரொட்டி மேன்” உணவகத்தின் உரிமையாளர் ராஜேஷ். சென்னை, துரைப்பாக்கம் ஜெயின் காலேஜ் அருகில் இருக்கிற ராஜேஷின் உணவகத்திற்கு ஒரு விசிட் அடித்தோம். உங்களைப் பற்றியும் உணவகத்தைப் பற்றியும் சொல்லுங்களேன் என்றதும் மகிழ்ச்சியோடு பேசத்தொடங்கினார் ராஜேஷ்.“என்னோட சொந்த ஊரு விருதுநகர் பக்கம் சாத்தூர்தான். பள்ளி, கல்லூரி படிப்பையும் நான் விருதுநகரில் முடித்தேன். பி.ஏ. வரலாறு படித்துள்ளேன். கல்லூரி காலத்திலேயே எனக்கு சொந்தமாக ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும் என்பது மட்டும்தான் ஆசை. ஆனால் அதற்கு முதலீடு வேண்டும். எங்கே சென்று வாங்குவது. நாம் சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை முதலீடாக போட்டு ஒரு பிசினஸை தொடங்கினால் மட்டுமே அது சாத்தியம் எனக்கு நானே சொல்லிக் கொண்டிருப்பேன். அப்படி நம்பிக்கையோடு நான் வேலை செய்வதற்கு வந்த இடம்தான் சென்னை. நம்பிக்கையோடு சென்னைக்கு வந்தால் போதும் எதாவது ஒரு வேலையை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

சென்னைக்கு வந்த நான் கீழ்பாக்கத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் வேலைக்கு சேர்ந்தேன். இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து மேலும் சில நட்சத்திர உணவகங்களில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் உணவு சமைக்க கற்றுக் கொண்டேன். ஒரு பக்கம் உணவகம் துவங்குவதற்கு பணம் சேர்க்க தொடங்கினேன். அப்படி சேர்த்து வைத்த பணத்தை வைத்து சென்னையில் இருக்கும் பிரபல ஐடி கம்பெனிகளில் தீ ரொட்டி மேன் என்ற உணவகத்தை தொடங்கினேன். நான் செய்து பரிமாறும் உணவிற்கு வாடிக்கயாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நம்ம ஊர் ஸ்டைல் ஃபுட் மட்டும் கொடுக்காமல் வடநாட்டில் ஃபேமஸான ரொட்டியும் நட்சத்திர ஹோட்டல்களில் தயார் செய்து கொடுப்பது போல் வாடிக்கையாளர்க்கு நான் தயார் செய்த உணவினை தர துவங்கினேன். கொரோனா காலகட்டத்தில் ஐடி கம்பெனிகளில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூரில் வைத்திருந்த உணவகத்தை முடினேன். இதனால் இரண்டு வருடங்கள் மிகவும் சிரமப்பட்டேன். கொரோனாவிற்கு பிறகுதான் இந்த ஜெயின் காலேஜ் அருகில் இருக்கும் இந்த உணவகத்தை திறந்தேன்.” என்று தொடர்ந்து பேசினார்.உணவகத்தை தொடங்கும்போது மார்கெட்டிற்கு சென்று உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவேன்.

அதேபோலதான் தற்போதும் உணவகத்திற்கு தேவையான பொருட்களை நானே நேரடியாக சென்று வாங்கி வருகிறேன். ஆரம்பத்தில் என்ன வகையான உணவுகளை கொடுத்து வந்தேனோ அதுதான் இன்றைக்கும் உள்ளது. எந்தவொரு உணவினையும் பழைய அரிசியில் சமைச்சா தான் உபரியும் அதிகமா கிடைக்கும். ருசியின் நாக்கில் நிற்கும். அதிகமாக சாப்பிடவும் முடியும் . சுவையும் ஆரோக்கியமும் கூட பழைய அரிசில தான் இருக்கு. அதனால அரிசி விசயத்துல மட்டும் எந்த மாற்றமும் பண்ணினது கிடையாது. பச்சை நிறத்தில் இருக்கின்ற வெந்தயக் கீரைய பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவுடன் சேர்த்து உருட்டி தோசைக்கல்லில் போட்டு எடுப்பேன். சப்பாத்திக் கல்லின் மீது வேகும் போதே அதன் வாசனை நம் மூக்கை துளைக்கும். நன்கு பொன்னிறமா வேக வைத்த வெந்தய சப்பாத்தியை வாழை இலை போட்ட தட்டில் வைத்துக்கொண்டு இருக்கும்போதே வாடிக்கையாளர்கள் சப்பாத்தியை வாங்க முந்துவார்கள். பரிமாறுவதற்கு முன்பு சப்பாத்தியின் மீது கொஞ்சம் பட்டர் விட்டு அதோடு பட்டர் பனீர் மசாலா, சன்னா மசாலா, கொஞ்சம் கொத்தமல்லி சட்னி, எங்களுடைய பேமஸ் தக்காளி சட்னி மட்டும்தான் கலந்து கொடுப்போம். மதியத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பொரியல், ஊறுகாய், மோரும் வழங்குகிறோம். தயிர் சாதம், சாம்பார் சாதமும் கொடுத்து வருகிறோம். மதியம் மற்றும் மாலை நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டம் உணவகத்தை தேடி வருகிறது.

சப்பாத்தியோடு தொட்டுச் சாப்பிடுவதற்கு காளான், பனீர், சென்னா கிரேவிதான் கொடுக்கிறோம். அசைவத்தில் டிக்கா, ப்ரை, கிரில் என்று சாப்பிட்டவர்கள் சைவத்தில் இதனை சாப்பிடும் போது மெய் சிலிர்த்து உண்ணுகின்றனர். அதனால் அசைவப்பிரியர்கள் மத்தியிலும் இந்த வகை சைவ உணவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் இட்லி, தோசை நெய்யோடு சேர்த்த பொடி இட்லி, வடை, பொடி தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசை, இடியாப்பம், ஆப்பம் கொடுத்து வருகிறோம். மதியத்தில் இப்போது வெரைட்டி ரைஸில் காளான் ரைஸ், சென்னா ரைஸ், ஆளு ரைஸ் என்று கொடுத்து கொண்டு இருக்கிறோம். இதுபோக தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சைச் சாப்பாடும் வழங்கி வருகிறோம். சப்பாத்தியில் இரண்டு வகையான காம்போ வைத்துள்ளோம். ரூ.50 ஒரு சப்பாத்தி காம்போ இருக்கு. அதில் 4 சப்பாத்தி , இரண்டு டைப் கிரேவி, ஒரு சேலட்டும் கொடுப்போம். மற்றொரு சப்பாத்தி காம்போவில் அன்லிமிடெட் சப்பாத்தி, ஒரு கப் சாப்பாடு, இரண்டு டைப் கிரேவி, சாலட்டும் கொடுக்கிறோம். குழம்பும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் விற்பனை செய்து வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் உணவகங்களில் காலையில் சாப்பிட்டால், மதியம் பசியே எடுக்காது என்று சிலர் சொல்லுவார்கள். அப்படியிருக்கக் கூடாது. எது சாப்பிட்டாலும் அடுத்த வேளை சாப்பாட்டு நேரத்திற்கு பசி எடுக்க வேண்டும். அதுதான் நல்ல உணவு. அந்தவகையில், எங்கள் உணவை தரமாக வழங்குகிறோம். வாடிக்கயாளர்கள் முன்பே சமைத்தும் கொடுக்கிறோம். வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்துபவர்களின் வாழ்த்துதான் என்றும் நம்மை வாழ வைக்கும். வயதானவர்கள் மட்டுமில்லாமல் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களும் எங்களது உணவகத்தை தேடி வந்து சாப்பிட்டு செல்கின்றனர். நூடுல்ஸ், பர்கர், சேன்வெஜ் என்று சாப்பிடும் இளசுகள் மத்தியில் எங்களது உணவகத்தில் நம்ம ஊர் ஸ்டைல் ஃபுட்களை வாங்கி சாப்பிடுவதை பார்க்கும் போது பேரானந்தமாக இருக்கிறது.” என்கிறார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி

Related posts

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை