ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு கட்டுரை வௌியீடு: இந்தியாவில் கொரோனாவால் 11.9 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020ல் கொரோனாவால் 11.9 லட்சம் பேர் பலியானதாக கூறப்படும் புள்ளி விபரங்களை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. ஒன்றிய அரசின் ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (என்எஃப்எச்எஸ்-5)’ வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2019 – 2020ம் ஆண்டுக்கு இடையே கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களின் ஆயுள்காலம் 3.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. ஆண்களுக்கு 2.1 ஆண்டுகள் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 11.9 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விபரங்களானது, ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த கொரோனா இறப்புகளைவிட எட்டு மடங்கும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டைவிட 1.5 மடங்கும் கூடுதலாகும்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, ஒன்றிய சுகாதாரஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்ஸ்போர்டு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. 14 மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பை, ஒட்டுமொத்த நாட்டின் புள்ளி விபரமாக கருத முடியாது. எனவே, குறிப்பிட்ட ஓராண்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளுக்கும் தொற்றுநோய் காரணமாக அமைவதில்லை. அறிக்கையில் குறிப்பிட்டதன்படி, கெரோனா காரணமாக 11.9 லட்சம் இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறுவது ஒரு மோசமான மற்றும் தவறாக வழிநடத்தும் மிகை மதிப்பீடு’ என்று தெரிவித்துள்ளது.

Related posts

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் வீழ்ச்சி..!!

மதுரை மாவட்டத்தில் செப்.11இல் மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு..!!

சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.1,430-க்கு விற்பனை..!!