கிண்டிக்காரரின் பேச்சை கேட்டு முறைகேடு புகாரில் சிக்கி தவிப்பதாக புலம்பும் யுனிவர்சிட்டிக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சியில் ரெண்டு நிர்வாகிகளுக்கு இடையே இருந்து வரும் கோஷ்டி பூசலால் தொண்டர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிமென்ட் மாவட்டத்தில் இலை கட்சியில் மாவட்ட செயலாளரான முதல் பாதியில் தொடங்க கூடிய தாமரையும், மாவட்ட ஊராட்சி தலைவரான கடைசி பாதியில் முடியக்கூடிய சேகரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வர்றாங்க.. சமீபத்தில் சேலம்காரர், மாவட்டத்திற்கு வந்தபோது அவரை வரவேற்பதற்காக ரெண்டு நிர்வாகிங்களும் மாவட்டத்தில் தங்களது செல்வாக்கை காட்டுவதற்காக போட்டிப் போட்டு தனித்தனியா வரவேற்பு கொடுத்தாங்களாம்..

அப்போது தான் அவர்களுக்குள் இவ்வளவு நாளா புகைந்து கொண்டிருந்த மோதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் நடக்கும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமோ அல்லது பொதுக்கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளிலோ ரெண்டு நிர்வாகிங்களும் கலந்துகொள்ள வந்தால் நேருக்கு நேரா முகம் பார்ப்பதே கிடையதாம்… இவர், வந்தால் அவர் வருவது கிடையாது.. அவர் வந்தால், இவர் வருவது கிடையாதாம்.. இப்படி இவர்களுக்கு இருந்து வரும் பனிப்போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்..

இருவருக்குமிடையே நடந்து வர்ற பனிப்போரால் 2வது கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எந்த பக்கம் போவதுன்னு தெரியாம அவங்களுக்குள்ளேயே தினம் தினம் புலம்புகிறாங்களாம்… இவர்களுக்குள் நடந்து வரும் பனிப்போர் சேலம்காரர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் ரெண்டு நிர்வாகிகளும் கிலியில் இருந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தலுக்கு நிதி தராத அதிகாரியிடம் மாஜி எம்எல்ஏ ஒருவர் மிரட்டல் தொனியில் பேசினாராமே..’’ என்றார் பீட்டார் மாமா.

‘‘விழுப்புரம் மாவட்டத்தில் பாஜவின் என் மண், என் மக்கள் அண்ணாமலையின் பாதயாத்திரைக்காக மாவட்ட பொறுப்பில் இருக்கும் மாஜி எம்எல்ஏ ஒருத்தர் அரசு அலுவலகம், வணிக நிறுவனங்களில் வசூல் செய்து நிகழ்ச்சியை ரொம்பவே தடபுடலா நடத்தி முடித்தாராம்.. அடுத்தடுத்து தேர்தல் நிதி கொடுங்கன்னு இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி, தனது ஆதரவாளர்களை வசூலுக்கு அனுப்பி இருக்கிறாராம்.. பிடிஓ உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவரே பேசி தேர்தல் நிதியை வசூலித்துக்கிட்டு இருக்கிறாராம்..

இந்நிலையில் அவர் சார்ந்த தொகுதியில் உள்ள ஒரு பிடிஓ அலுவலகத்தில் தேர்தல் நிதி கொடுக்காத அதிகாரியை தொடர்பு கொண்ட மாஜி எம்எல்ஏ, என்னை பாஜக காரனா பாக்காதீங்க, பழைய பாமக காரன், எல்லாம் மறந்துபோச்சா என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினாராம்.. மரத்தைவெட்டி, சாலை மறியல் போராட்டம், கல்வீச்சினால் கிடைத்த சீட்டில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர் பாஜவில் ஐக்கியமாகி மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார்.

இவர் மீது கட்சியிலேயே அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் தற்போது தேர்தல் நிதி வசூலுக்கு களமிறங்கி, பழைய பாமககாரன் என்பதை கையில் எடுத்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாரிசுகளை களத்தில் இறக்கிட்டு தோல்வியடைந்து விடக்கூடாதுன்னு ரொம்ப உறுதியா இருக்கும் மாஜிக்கள் பற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு இலைக்கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சி தலைமை பெரும் குழப்பத்தில் இருக்கிறதாம்.. உளறல் மாஜியும், ஊர் பெயர் கொண்ட மாஜியும் தங்கள் வாரிசுகளை தேர்தலில் களமிறக்கி தோல்வியடைந்து விடக்கூடாது என்பதில் கடும் உறுதியா இருக்காங்களாம்..

இருவரும் ஜகா வாங்குவதால் கலங்கிப்போன கட்சித் தலைமை, மாஜி எம்எல்ஏவானவரை அழைத்து நீங்களாவது நில்லுங்க என்றதாம்.. இதைக்கேட்டு பதைபதைத்துப் போன மாஜி எம்எல்ஏவும் ‘என்னால முடியாது, வேற யாரை நிறுத்தினாலும், இரண்டு பேருக்கும் பொதுவாகத்தான் பார்க்கணும். ஒருத்தரு பரிந்துரையில் நிறுத்தினால், அடுத்தவர் தேர்தல் வேலையை சரிவர பார்க்காமல் எதிராகத்தான் இருப்பார். இப்படி நீயா, நானா என செயல்பட்டால் கோஷ்டி மோதலே மிஞ்சும். பேசாம பூட்டு நகரத்து நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக் கட்சியினர் யாராவது கேட்டால் கொடுத்து விடுங்கள்’ என்று யோசனை தெரிவித்தாராம்..

அத்தோடு, கடந்த எம்பி தேர்தலில் தமிழகத்திலேயே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் சூரிய கட்சி வென்றதைக் கூறி, இலைக்கட்சியின் கூட்டணி கட்சியான மாம்பழம் வெறும் 2 லட்சம் வாக்குகளே பெற்றதையும் தெரிவித்து, தோற்றுப்போவது தெரிந்தே களமிறங்கலாமா என கச்சிதமாகக் கூறி மாஜி எம்எல்ஏவானவரும் நழுவுவதை கட்சி நிர்வாகிகளே பாராட்டி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிண்டிக்காரர் கைவிட்டதால் புலம்பி தவிக்கும் விசி.,க்காரர் கதையை சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில அடுத்தடுத்து நடந்த முறைகேடு புகார், கைது, சஸ்பெண்ட் உத்தரவு எல்லாம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியது. இந்த விவகாரங்களில் கிண்டிக்காரரோட ஆதரவு முழுசா விசி.,க்குதான் இருந்தது. இத பயன்படுத்தி எப்படியாச்சும் பதவி நீட்டிப்பு வாங்கிடணும்னு ஆசைப்பட்ட விசி, சமீபத்துல ரிஜிஸ்திரார சஸ்பெண்ட் செய்ய சொன்ன, அரசோட உத்தரவ கூட மதிக்காம கிடப்பில போட்டுட்டாரு..

ஆனா இப்போ திடீர்னு கிண்டிக்காரரோட சப்போர்ட் குறைஞ்சிட்டதாவும், இந்த விவகாரத்துல தனக்கு இனிமே ஆதரவு கிடைக்குமானு விசி குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறதாவும் தகவல் வெளியாகி இருக்கு.. இதனால தன்னை எப்படியாவது காப்பத்தணும்னு, தான் சார்ந்த சமுதாய முக்கிய பிரமுகர்கள் கிட்ட தஞ்சம் அடைஞ்சிருக்காராம்.. மேலும், என் மேல எந்த தப்பும் இல்ல..

நான் எப்பவும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன்னு சொல்லுற மாதிரி, 2 புத்தக அளவுக்கு சுய அறிக்கை தயார் செஞ்சு, மஞ்சள் மாவட்டத்து விஐபிய சந்திச்சு பேசியிருக்காரு.. அவரோட பரிந்துரையின் பேர்ல, டிபார்ட்மென்ட் விஐபியையும் பார்த்து நடந்த சங்கதிய சொல்லி காப்பாத்தணும்னு கெஞ்சியிருக்காராம்.. அதேசமயம் கிண்டிக்காரரோட பேச்ச கேட்டு, இப்போ நான்தான் சிக்கல்ல மாட்டிட்டு தவிக்கிறேன்னு தன்னோட சகாக்கள் கிட்ட சொல்லி புலம்பி தவிக்கிறாராம் விசி..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு