பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல் பஞ்சாயத்தை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘பல பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் பல்கலைக்கழகத்தில் அடுத்த பிரச்னை உருவெடுத்துள்ளதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்காநகர் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பழைய பொருட்கள் மற்றும் பழைய விடைத்தாள் உள்ளிட்டவை ஏலம் விடப்படுவது வழக்கம். அதில், குறிப்பாக 3 ஆண்டுகள் கழிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்கள், அரசு காகித தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு, அதற்கு பதிலாக மீண்டும் அங்கிருந்தே பேப்பர் வாங்கும் நடைமுறை இருந்து வந்தது. வெளியே விற்பனை செய்தால் அதுவும் முறையாக ஏலம் விடப்பட்டு அந்த பணம் பல்கலைக்கழக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், பல்கலையில் துணைவேந்தர் இல்லாததை கருத்தில் கொண்டு, ஒரு அதிகாரி பல்கலைக்கழக பழைய நடைமுறையை பின்பற்றாமல் விடைத்தாள்களை முறையான ஏலம் இன்றி விற்பனை செய்ததும், இதற்கு முறையாக கணக்கு காட்டாமல் சம்பந்தமில்லாத பொருட்களை வாங்கியதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். இந்த விவகாரம் கன்வீனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தெரியவர, காரணமான அதிகாரியை கண்டுபிடித்து கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால், ஊழல் குற்றச்சாட்டில் எப்போது என்ன நடக்குமோ என்ற பரபரப்பில் பல்கலைக்கழக வட்டாரம் உள்ளதாம். ஏற்கனவே பல பிரச்னையில் ஓடும் பல்கலைக்கழத்தில் அடுத்த பஞ்சாயத்தா என்கின்றனர் ஆசிரியர்கள், மாணவர்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நிலம் கையகப்படுத்துற டிபார்ட்மென்ட் ஏன் அதிர்ச்சியில் இருக்குதாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குயின்பேட்டை மாவட்டம் லிங்கர் ஏரியாவைச் சேர்ந்த ஒருத்தரோட நிலத்தை, ரயில்பாதை அமைக்க கையகப்படுத்தியிருக்காங்க. இதுக்கு இழப்பீடு தொகையாக அனைத்து அசல் ஆவணங்களையும் கொடுத்திருக்காரு. கையகப்படுத்துனது போக மீதம் நிலம் இருக்கறதால, அதிகாரிங்க கிட்ட கொடுத்த அசல் ஆவணங்களை வாங்க மாவட்ட தலைமை ஆபிசுக்கு போயிருக்காரு. அங்க துறை சார்ந்த ஸ்பெஷல் வட்ட அதிகாரி, 6கே சம்திங் கேட்டிருக்காரு. அதுக்கு ஏற்கனவே நிலம் போன வருத்தத்துல இருக்குறேன், இதுவேறயான்னு கேட்டிருக்குறாரு. அதுக்கு வட்ட அதிகாரி, சரி 4 கே கொடுங்கன்னு பேரம் பேசியிருக்குறாரு. சம்திங் கொடுக்க விரும்பாதவரு, இந்த சம்திங் மேட்டரை விஜிலென்ஸ் காதுல போட்டிருக்காரு, அவங்க வலைய விரிஞ்சு காத்திருந்த நேரத்துல, 4 கே வாங்கிய வட்ட அதிகாரி ைகயும் களவுமாக சிக்கிட்டாரு. சஸ்பெண்ட்டும் ஆகிட்டாரு. இதனால குயின்பேட்டை, வெயிலூர், மிஸ்டர் பத்தூர், கிரிவலம்னு சுத்துப்பட்டு மாவட்டங்கள்ல இருக்குற நிலம் கையகப்படுத்துற டிபார்ட்மென்டே அதிர்ச்சியில இருக்குதாம். இந்த 4 கே மேட்டர் தான் 4 டிஸ்ட்ரிக்ல ஹாட் டாப்பிக்காக பேசப்படுதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லேடி விவகாரத்தில் கட்டிப்புரண்டு காக்கிகள் குஸ்தி போட்டாங்களாமே…’’
‘‘ஆமா.. புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கி துறையில் லேடி விவகாரத்தில் இரு போலீசார் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டு இருக்கிறார்களாம். ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் இந்த துறையை சேர்ந்த லேடி விவகாரத்தில், எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனரும், விஐபி எஸ்கார்டில் பணியாற்றும் ஓட்டுனருக்கும் இடையே சமீப நாட்களாக மோதல் நீடித்திருந்ததாம். இந்த மோதலின் வெளிப்பாடு நடு ரோடு வரை கொண்டு வந்திருக்கிறதாம். இரு காக்கிகளும் பைக்கில் சென்ற போது, நேருக்கு நேர் மோதி கைகலப்பில் ஈடுபட்டார்களாம். மேலும் ஆபாச வார்த்தைகள் அர்சித்தபடி நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட விவகாரம் உயர் அதிகாரி வரை சென்றுள்ளதாம், இது சம்பந்தமாக ஸ்டேஷனில் புகார் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறதாம். ஆனால் விசாரணை அதிகாரிகள், லேடி விவகாரத்தை மறைத்து இருவருக்கும் தனிப்பட்ட பிரச்னை, விபத்து வழக்கு என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை தலைவரின் பதிலால் நிர்வாகிகள் `ஷாக்’ ஆனாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய அரசோட சமீபத்திய பட்ஜெட்டுல எல்லா தரப்புக்கும் ஏமாற்றமே கிடைச்சது. குறிப்பா தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறாம, ஒட்டுமொத்தமா புறக்கணிச்சுட்டதால தாமரை கட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கு. இத சமாளிக்க முடியாம திணறும் அக்கட்சிய சேர்ந்தவங்க, மறைமுகமா பட்ஜெட்ல பல விஷயம் இருக்குனு பிரசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அந்த வரிசையில முட்டை மாவட்டத்த சேர்ந்த துணை தலைவரு, மாங்கனி மாவட்டத்துல பட்ஜெட் சம்பந்தமா பிரஸ்மீட் ஒன்ன நடத்தியிருக்காரு. அப்போ தமிழகத்துக்கு எதுவும் அறிவிக்காம, ஆந்திராவுக்கு மட்டும் பல கோடி ஒதுக்கீடு செய்திருப்பது தொடர்பாக கேள்வி கேட்டுருக்காங்க. என்னென்னமோ சொல்லி சமாளிச்ச தலைவரு, கடைசியாக ஆவேசமாக ஒரு பதில சொல்ல, பத்திரிகையாளர் மட்டுமின்றி அங்கிருந்த அவங்க கட்சி நிர்வாகிங்களே ஷாக் ஆகிட்டாங்களாம்.
அதாவது, மாங்கனி மாவட்டத்த தலைநகரா கொண்டு ஒரு புதிய மாநிலத்த உருவாக்குனா, நானே ₹20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வாங்கித்தரேன்னு தடாலடியா ஒரு பதில சொல்லியிருக்காரு. இது என்னடா புது புரளியா இருக்குனு, அங்கிருந்த நிர்வாகிகளே திருதிருன்னு முழிச்சிக்கிட்டு விழிபிதுங்கிப் போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒன்றிய அரசும் அதன் அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி வர்றதா தூங்கா நகர் வாசிகள் ஆத்திரத்தில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து மக்களவைக்காரர், ‘நிதிநிலை அறிக்கையில் மட்டுமே தமிழ்நாடு வஞ்சிக்கப்படல, முக்கியமான பல திட்டங்களுக்கும் நிர்வாக ரீதியாக அனுமதி தராம ஒன்றியத்துக்காரங்க இழுத்தடித்து வஞ்சம் தீர்க்கிறாங்க’னு சொன்னதெல்லாம் உண்மைதான். ஒன்றிய அரசு, தூங்காநகரத்தில் பல்வேறு பணிகளுக்கும் அனுமதி தராம இழுத்தடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தென்மாவட்ட மக்கள் வேதனையில் இருக்காங்களாம். குறிப்பாக, தூங்கா நகரில் கொச்சிக்கான நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு அருகே மாநில அரசாங்கம் பாலம் கட்டுது. இந்த இடத்துல கிராசாகுற ரயில்வே லைனுக்கு மேம்பாலம் கட்டுற அனுமதியை கொடுக்காம தொடர்ந்து அலையவிட்டுக் கொண்டிருக்கும் புகார் எழுந்திருக்கிறது. ஒன்றிய அரசு மட்டுமின்றி, ஒன்றிய துறையின் அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி வருவது தூங்கா நகர் வாசிகளிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி, போராட்டம் நடத்தவும் தூண்டி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு