தொழிற்சங்கங்கள் போராட்டம் தோல்வி 97%  பேருந்துகள் இயக்கத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை

சிவகங்கை,ராமநாதபுரம் : சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று 97 சதவீத அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. வேலை நிறுத்தத்தால் ஏந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.அகவிலைப்படி நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பஸ்களை எப்போதும் போல் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளில் போக்குவரத்து அலுவலர்கள் ஈடுபட்டனர். நேற்று அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தையும் இயக்க, ஊழியர்கள் வருகை குறித்து பணிமனைகளில் அலுவலர்கள் கண்காணித்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பணிமனை உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4பணிமனைகளில் 159ரூட் பஸ்கள், 146டவுன் பஸ்கள் உள்பட சுமார் 300பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஆயிரத்து 200தொழிலாளர் பணியில் உள்ளனர்.

இதில் மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் 97 சதவீத பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வழித்தடங்களில் ரூட் பஸ் மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தால் அரசு பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வேலை நிறுத்த அறிவிப்பையடுத்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் கூட்டமும் எப்போதும் போல் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலும் இருந்தது. அனைத்து போக்குவரத்து பணிமனையிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பணிமனைகள், பஸ் ஸ்டாண்டுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரத்தில் 2 என மாவட்டத்தில் மொத்தம் 6 பஸ் டேப்போக்கள் உள்ளன. இவைகளின் சார்பாக 120 நகர பேருந்துகள் உட்பட 320 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்த நிலையில் பல பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 97 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கம் போல் அதிகாலை முதல் இயக்கப்படும் பஸ்கள் இயங்கவில்லை. காலை 6மணிக்கு மேல் பணிக்கு வந்த ஊழியர்களால் பஸ்கள் இயக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் வேலை நாட்கள் என்பதால் காலை நேரங்களில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தால் பஸ்கள் ஓடாது என கருதிய பொதுமக்கள் பஸ் ஏற வரவில்லை. கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, ராமநாதபுரம் போன்ற ஊரக பகுதிகள் ஒரு சில இடங்களில் மட்டும் சில டவுன் பஸ்கள் ஓடாததால் கிராமமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டனர். மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரைக்கு வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதுபோல் பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நாள்தோறும் 65 பேருந்துகள் மதுரை,திருச்சி, காரைக்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்பட்டது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து உள்ளனர்.

இதனால் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் இயங்குவதால் போதுமான அளவு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் சென்று வருகிறது. இதுபோல் மாவட்டம் முழுவதும் சீரான அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு பாதிப்பில்லை.

தொமுச பொதுச்செயலாளர் பச்சைமால் கூறுகையில், அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தொமுசவினர் நகர் மற்றும் புறநகர் பஸ்களை இயக்கினர். காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, சிவகங்கை, தேவகோட்டை கிளைகளில் 97.82 சதவீத பஸ்களும், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் கிளைகளில் 82.52 பஸ்களும் இயக்கப்பட்டது என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு