ஒன்றிய அமைச்சர் பதவி, 10 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்: பாஜ-பாமக கூட்டணி உறுதி; வழக்குக்கு பயந்து சாய்ந்த அன்புமணி நம்ப வெச்ச எடப்பாடிக்கு அல்வா

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகிறது. ஆனால் மெகா கூட்டணி அமைக்க போறோம் என்று கூறிய பாஜ, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை. குறைந்தபட்சம் டெபாசிட் வாங்க வேண்டுமென்றால் கூட்டணி அமைக்க வேண்டிய சூழலுக்கு அதிமுக, பாஜ தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாமக, தேமுதிக மற்றும் லெட்டர் பேட் கட்சிகளுடன் பேரத்தை தொடங்கியது அதிமுக, பாஜ. இதில் என்ன கூத்து என்றால் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜவுடன் பாமக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், இரண்டு கட்சிகளும் எந்த பக்கம் சாயலாம் என்று மதில் மேல் பூனையாக காத்திருந்தனர்.

ஒரு பக்கம் அன்புமணி மற்றும் பிரேமலதாவுடன் ஒன்றிய அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து பதவி ஆசையை கூறி இழுக்க முயற்சித்தனர். இன்னொரு பக்கம் ராமதாஸ் மற்றும் பிரேமலதாவுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதிமுக சார்பில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக கூறினர். பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் பதவி, 10 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்தனர். ராமதாஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள், ‘பாஜவுடன் சென்றால் ஓட்டு கேட்க முடியாது. எதிர்காலம் இருக்காது’ என கூறி அதிமுகவுடன் கூட்டணி செல்லலாம் என்று கூறினர்.

ஆனால், அன்புமணியிடம் டீலிங் பேசிய பாஜ, அவர் மீது உள்ள வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மிரட்டியதாக தகவல்கள் வெளியானது. இதனால் வழக்குக்கு பயந்தும், பதவிக்கு ஆசைப்பட்டும் பாஜவுடன் கூட்டணி செல்ல அன்புமணி முடிவு செய்து ராமதாசை சமாதானம் செய்தார். இதனால் பாமக எந்த பக்கம் சாயும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் எடப்பாடியை சேலம் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். இதில் பாமக-அதிமுக கூட்டணி இறுதியானது என கூறப்பட்டது. இருப்பினும் உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு பின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று பாமக தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் 19 பேர் கொண்ட உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பேராசிரியர் தீரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின்போது கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதில் பெரும்பாலானோர் பாஜவுடன் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியதாக தகவல்கள் வெளியானது.

உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட குழுவினர் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனால் பாஜவுடன் பாமக கூட்டணி வைக்கிறது. பாஜவுடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டத்தில் அறிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து நாளை (இன்று) முடிவு செய்யப்படும்,’ என்றார். உங்களுடந்தான் கூட்டணி என்று பாமக தூதர்கள் எடப்பாடியை நம்பி வைத்து, கடைசியில் அல்வா கொடுத்து பாஜ பக்கம் சாய்ந்தது அதிமுக தலைவர்களை அதிர்ச்சிடைய வைத்து உள்ளது.

* அன்புமணி ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிருப்தி மாவட்ட செயலாளர் ஒருவர் கூறுகையில், ‘பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று நடத்தினால் பெரிய பிரச்னை ஏற்படும் என்பதால் அன்புமணிக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் இருந்து ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றார்கள். அதில், பாஜவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், முழு மனதோடு பாஜவுடன் கூட்டணி என்றால் இந்நேரம் அனைத்து நிருபர்களையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பார். ஆனால் ராமதாசுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாஜவுடன் கூட்டணிக்கு முழு சம்மதம் கிடையாது,’ என வருத்தத்துடன் கூறினார்.

* சேலத்தில் இன்று நடக்கும் மோடி கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி பங்கேற்பு
பாஜவுடன் ஜி.கே.வாசன், ஓபிஎஸ், டிடிவி, ஜான்பாண்டியன் கூட்டணியை இறுதி செய்த நிலையில், பாமக கூட்டணியில் இணைந்து உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் மற்றும் சமகவை பாஜவுடன் இணைத்த சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவிலும் கூட்டம் சேராததால் பாஜ தலைவர்கள் அப்செட்டில் உள்ளனர். இதனால், இன்று சேலத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜ அழைப்பு விடுத்து உள்ளது.

சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்கான பாஜ பிரசார பொதுக்கூட்டம், சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் இன்று (19ம் தேதி) மதியம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து, ஹெலிகாப்டரில் மூலம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று மதியம் 1 மணிக்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது. பின்னர் அங்கு மக்களை சந்தித்த பின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி முடிவான பின் முதல்முறையாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன், அன்புமணி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு