பள்ளி சுவர், சமையலறையில் மனிதக்கழிவு பூசிய சமூக விரோதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6வது வார்டு அம்பேத்கர் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளி சுவரிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர். அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள்.

இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பள்ளி சுவரிலும், சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவருப்பை ஏற்படுத்துகிறது. நாகரிகமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

Related posts

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது