சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.7,425 கோடி மட்டுமே: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடி. இதில் 12 சதவீத ஒன்றிய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசின் பங்கோ ரூ.22,228 கோடி. இந்த மொத்த திட்டத்தில் ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறுகிற கடன் ரூ.33,593 கோடி. ஜப்பான் நாட்டு ஜிகா நிறுவனம் கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழலில் தமிழ்நாடு அரசே தமது சொந்த நிதியிலிருந்து திட்டத்தை நிறைவேற்ற தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. சமீபத்தில் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு, ஒன்றிய அரசின் 12 சதவீத பங்களிப்பை வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூ.18524 கோடி செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூ.11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூ.6802 கோடி. ஆனால், மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவீத்தை ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவீதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத்தான் நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக பாஜ ஆளும் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதுபோன்று ஒன்றிய பாஜ கூட்டணி அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமேயானால் பாஜவை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

 

Related posts

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்