ஒன்றிய அரசின் அடுத்த ஊழல்? மதுரை எய்ம்ஸ் டெண்டர் ஆலோசனை நிறுவனம் ரூ.1,528 கோடி முறைகேடு: சிபிஐ பிடியிலும் சிக்கியுள்ளதால் சர்ச்சை

மதுரை: மதுரை எய்ம்ஸ் டெண்டருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் மீது ரூ.1,528 கோடி முறைகேடு புகார் கூறப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் சமீபத்தில் டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு 6 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 3 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டது. இறுதியாக சேலத்தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்கு எதிராக 3 நிறுவனங்களின் ஒன்றான லக்னோவைச் சேர்ந்த ஆர்ச்-என் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது ரூ.1,528 கோடி ஊழல் புகார் உள்ளது. இந்நிறுவனம் சிபிஐ வளையத்தில் உள்ளது. முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை. டெண்டர் விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஹிடெஸ் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆன்லைனில் நடைபெறும் நிறுவன தேர்வு ஆப்லைனில் நடத்தப்பட்டது ஏன்? வழக்குகள், குற்றம் பின்னணி உள்ள நிறுவனங்கள் பங்கேற்பதை தடை செய்யும் அம்சம், விண்ணப்ப படிவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ஏன்?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2005ல் அறிவிக்கப்பட்டு, 2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரப்படும் நிலையில், அதற்கான ஆலோசனை வழங்கும் நிறுவனம் மீது மோசடி புகார் எழுந்திருப்பதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சிஏஜி அறிக்கையில் ஒன்றிய அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் அம்பலமாகி உள்ள நிலையில் தற்போது ரூ.1,528 கோடி முறைகேடு செய்த நிறுவனத்தை எய்ம்ஸ் டெண்டருக்கு ஆலோசகராக நியமித்து உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து மதுரை எய்ம்ஸ் என்ற தலைப்பில் ட்விட்டரில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், ‘திட்ட ஆலோசனை நிறுவனத்தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு. சிபிஐ வளையத்தில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதலா? ஒரே போன் நம்பரில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்ததைப் போல, ஒரே செங்கல்லை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

* எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: ஒன்றிய அரசு தகவல்
எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து முடிக்கக்கோரி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசின் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப் பணிக்கான டெண்டர் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதியானதும் 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடியும். தற்போது பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது’’ என்றார். இதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக். 13க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது