மின் உற்பத்தி, மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் 3 ஆக பிரிப்புக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூன்றாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 1957ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வந்தது. கடந்த 2010ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மின் உற்பத்தி, மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி உற்பத்திக் கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எரிபொருட்கள் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்பது காற்று, சூரியஒளி, உயிரி எரிபொருள், கடல் அலை உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்ளும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதற்கு ஒப்புதல் அளித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், பிரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரியது. இதையடுத்து, ஒன்றிய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் உள்பட அனைத்து அலுவலர்களுக்கும் புதிய பெயரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஒப்பந்ததாரர்கள், சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயரில் புதிய கொள்முதல் ஆணைகள் மற்றும் பணிகள் வழங்கப்பட வேண்டும். சொத்துகள், உரிமைகள், பொறுப்புகள் மற்றும் பணியாளர்களை பிரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான தற்காலிக பரிமாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களுக்கான லோகோக்கள், பணியாளர்கள் இடமாற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளோம். செயல்திறனை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம். மின் உற்பத்தியை விநியோகத்திலிருந்து பிரிப்பது நிதி இழப்பைக் குறைக்கும். மின் உற்பத்தி கழகம் இப்போது தனியார் நிறுவனங்களுடன் திறம்பட போட்டியிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related posts

புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!!

புல்டோசர் நடவடிக்கைக்கு தடை: அகிலேஷ் யாதவ் வரவேற்பு

சேலத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு..!!