ஒன்றிய அரசு போதிய நிதியை கொடுக்கும் என நம்புகிறோம் பேரிடர் இல்லை என கூறிய நிர்மலா இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நெல்லை: ‘பேரிடர் இல்லை என கூறிய நிர்மலா சீதாராமன் இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார். பாதிப்பை பார்த்து போதிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்கும் என நம்புகிறோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் 48 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கு நிவாரணம் என மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், வீடுகளை இழந்த 5 பேருக்கும், கால்நடைகளை இழந்த 5 பேருக்கும் நிவாரண உதவிகளை நெல்லை மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும். தென் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறோம். கடந்த 10 தினங்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகிறோம். தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். 100 ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய மழை பெய்துள்ளது. கால்நடைகளை இழந்தவர்களுக்கு சான்றிதழ் இருந்தாலே நிவாரணம் கொடுக்கப்படும். புதிய அணை கட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் தெரிவிப்பர். மாஞ்சோலை மலை கிராமத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் இது பேரிடர் இல்லை என்றார்.

இப்போது பாதிப்புகளை பார்க்க அவரே வருகிறார். கண்டிப்பாக பாதிப்புகளை பார்த்து விட்டு அவர் தகுந்த நிதியை கொடுப்பார் என்று நம்புகிறோம். பிரதமர் மோடி தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசியுள்ளார். எனவே ஒன்றிய அரசு சார்பில் போதிய நிதியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 4,883 பேர் வீடுகளை இழந்ததாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 16 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தோம்.

மாவட்டத்தில் உயிரிழப்பு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் இழப்பு உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ.188 கோடி தேவைப்படுகிறது. இதனால் ஆய்வு செய்து ஒவ்வொரு கட்டமாக நிவாரண உதவிகள் வழங்கப்படும். இன்னும் 3 முகாம்களில் மட்டும் மக்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் வினியோகம் 98% சீரடைந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் முழுமையாக சீரடைந்து விடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதைவிட பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். கடந்த ஆட்சி போன்று யாரும் வீட்டில் தூங்கிக் கொண்டு, தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என்று சொல்லாமல், அனைவரும் மழை பெய்யும்போது, வெள்ளம் வரும் போதும் களத்தில் தான் இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஏரல் பகுதியில் நடந்து சென்று ஆய்வு
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம், மங்கலக்குறிச்சி, ஏரல் பகுதி கிராமங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர், ஏரல் ஆற்றுப்பாலப் பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகில் இருந்து மெயின் பஜார் வழியாக நடந்து சென்று பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டார். அதன் பிறகு ஏரல் தனியார் திருமண மண்டபத்தில் திரண்டிருந்த வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது வியாபாரிகள் தாங்கள் அனைத்து பொருட்களையும் இழந்து மீளா துயரில் இருந்து வருவதாகவும் மீண்டும் வணிகம் செய்வதற்கு நிவாரணம் மற்றும் வட்டி இல்லாத கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டுள்ளேன், உங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு