ஒன்றிய அரசின் அழைப்பின்பேரில் லட்சத்தீவில் மோடி நிகழ்ச்சிக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு

சென்னை: தமிழக காவல்துறை தான் உலக அரங்கில் சிறந்த காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது. புலனாய்வில் ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக தமிழக காவல்துறை விளங்குவதாக மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், தமிழகம் அமைதியான மாநிலம் என்ற பெயரும் உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக போலீசாரின் பணி சிறப்பு மிக்கவையாக உள்ளன. தமிழக காவல்துறையில் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் பதவி ஏற்ற பிறகு காவல்துறையில் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன. கூலிப்படையினர், ரவுடிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் கொலைகள் பெருமளவில் குறைந்துள்ளன. வெள்ளப் பகுதிகளில் நடந்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும், தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பல்வேறு சம்பவங்களில் தமிழக போலீசார் திறம்பட செயல்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லட்சத்தீவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தமிழகத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஒன்றிய உள்துறையில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, எஸ்பிக்கள் அருண் பாலகோபாலன், ஹரிகரன் பிரசாத் மற்றும் 4 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் லட்சத்தீவுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அவர்கள் நேற்று தமிழகம் திரும்பினார். லட்சத்தீவுக்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு தமிழக போலீசார் சென்றது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?