Sunday, September 29, 2024
Home » ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேற்றம்

ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேற்றம்

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட, ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்தும், கருத்துகளை தெரிவித்தும் பேசிய உறுப்பினர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். பேரவையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை நேற்று கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயர்ந்த கோட்பாட்டின் வழியில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சமுதாய சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, தனது சமூகநீதிப் பயணத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம்தான் உண்மையான, பரவலான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும்.

அந்த நோக்கத்துடன்தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் ஒரு சமநிலையைக் கொண்டு வருவதற்காக இடஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து, அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். சமீபகாலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம்கூட, இந்தப் பேரவையிலே பாமக உறுப்பினர் கோ.க.மணி பேசும்போதுகூட, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள் குறித்து இந்தப் பேரவைக்கு முழுமையான விவரங்களை எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அதாவது, ஒன்றிய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது Census Act 1948-ன்கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணி. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நடத்தப்பட்டுவரும் ஒரு மாபெரும் பணி. மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால், பொதுவெளியில் பரவலாகத் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவரச் சட்டம் 2008, அதாவது, Collection of Statistics Act, 2008ன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும். இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (அ)-ன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையிலுள்ள இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்களை சேகரிக்க இயலாது.

அந்த 7வது அட்டவணையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு 69வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இச்சட்டத்தின் பிரிவு 32ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948ன்கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பொருள் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பொதுவெளியில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். 2008ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள இயலாது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது ஒன்றிய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவேதான், இப்பணியை ஒன்றிய அரசு மேற்கொள்வதுதான் முறையாக இருக்குமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021ம் ஆண்டு மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு இன்றுவரை காலம் தாழ்த்தி வருவது எதனால்? முதல் ஆண்டு கோவிட் பெருந்தொற்றைக் காரணமாக சொன்னார்கள். தற்போது கோவிட் சென்று 3 ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றிய அரசு தன் கடமையைப் புறக்கணிக்கும் செயல் அல்லவா?.

நாம் தொடர்ந்து கோரிக்கை வைப்பது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உடனடியாகத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த 20.10.2023 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அவ்வாறு ஒன்றிய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும்தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும். மாறாக, அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால் அது பின்னொரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.

எனவேதான், இந்தக் காரணங்களின் அடிப்படையில் ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்றும் இந்தப் பேரவை வாயிலாக தீர்மானத்தை நான் முன்மொழிய விரும்புகிறேன். தீர்மானம் “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது. எனவே 2021ம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது”. மேற்கண்ட இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானத்தின் மீது வேல்முருகன் (தவாகா), ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சின்னப்பா (மதிமுக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி (சிபிஎம்), சிந்தனை செல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜ), அருள் (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இங்கு பேசிய உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் சொல்லி, அதே நேரத்தில் தீர்மானத்தை வரவேற்றும் பேசியிருக்கிறார்கள். அதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமையும், சமவாய்ப்பும் அனைவருக்கும் கிடைத்திட உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். எனவே உறுப்பினர்கள் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும்” என்றார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

* 2008ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள இயலாது.
* சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது ஒன்றிய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021ம் ஆண்டு மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு இன்றுவரை காலம் தாழ்த்தி வருவது எதனால்?
* கோவிட் சென்று 3 ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றிய அரசு தன் கடமையைப் புறக்கணிக்கும் செயல் அல்லவா?

You may also like

Leave a Comment

13 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi