ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது: எதிர்க்கட்சி சார்பில் முதல் பேச்சாளராக ராகுல்காந்தி பங்கேற்பு

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெறுகிறது.நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சி சார்பில் முதல் பேச்சாளராக ராகுல்காந்தி பங்கேற்கிறார். பாஜக சார்பாக நிஷிகாந்த் தூபே விவாதத்தில் முதல் பேச்சாளராக பங்கேற்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்கொடுமை தொடர்பாக விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்., ஆம்ஆத்மி பங்கேற்றுள்ளனர். மக்களவையில் இன்று பகல் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. கேள்வி நேரத்துக்கு பின் விவாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ராகுல்காந்தி மக்களவையில் பேசுவார் என காங். தகவல் அளித்துள்ளது. அதிர் ரஞ்சன் சௌத்ரி, சசிதரூர், கௌரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பாக பேசுவார்கள். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ம் தேதி பதில் அளிப்பார் என மக்களவை அலுவல் குழு முடிவு செய்துள்ளனர்.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும், நாளையும் தொடரும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பதில் உரைக்குபின் தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. பகுஜன் சமாஜ்,மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவுதராமல் விலகி இருக்கும்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!