இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில், வரும் 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒன்றியத்தில் புதிய அரசு அமைந்த பிறகு நாடாளுமன்ற 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். அதன்பின் 26ம் தேதி மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடந்தது. அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

அதன்பின் மக்களவை கடந்த 2ம் தேதியும், மாநிலங்களவை 3ம் தேதியும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒத்திவைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்றும், அதற்கு அடுத்த நாளான வரும் 23ம் தேதி 2024-25ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்றும், மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு