நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும் ஒன்றிய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மக்களவை தேர்தல் நடக்க இருந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பாஜ அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எந்த எதிர்பார்ப்புகளும் இடம் பெறவில்லை. வருமான வரி வரம்பில் மாற்றம், புதிய ரயில்கள் அறிவிப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மதுரை எய்ம்ஸ் என எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தல் முடிந்து தற்போது 3வது முறையாக ஒன்றியத்தில் மோடி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

புதிய ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி, கடந்த 3ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில், 18வது மக்களவையின் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசின் பரிந்துரைப்படி, வரும் 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் வரும் 23ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்’’ என கூறி உள்ளார்.

கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டானது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலானது. தற்போது, புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, 2024-25ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக பல்வேறு தரப்பினர்களுடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார். இது முழு பட்ஜெட் என்பதாலும், தேர்தலுக்குப் பின் அறிவிக்கப்படும் பட்ஜெட் என்பதால் மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் இடம் பெறுமா என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் வேண்டுமென நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வருமான வரியில் வழங்கப்படும் நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட வேண்டுமென சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், புதிய வருமான வரி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி இல்லை. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பழைய வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டுமென்பது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. இது 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜ அரசு இந்த முறையாவது செய்யுமா என சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே போல, புதிய வருமான வரியில் வீட்டு கடன்களுக்கான வரி சலுகை வழங்கப்படுமா என்பதும் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

பழைய வருமான வரியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வீட்டு கடன்களை கணக்கு காட்டலாம். இந்த சலுகை புதிய வருமான வரியில் இல்லை. இது வருமான வரிச் சட்டம் பிரிவு 24 (பி)ல் சேர்க்கப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இதுதவிர, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்படும் மானியத்தை உயர்த்துதல், நகர்ப்புறங்களில் முதல் முறை வீடு வாங்குவோருக்கு வங்கி கடனில் ரூ.2.5 லட்சம் மானியம் வழங்குவதை மீண்டும் கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகள் இடம் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, சேமிப்பு கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கான வரி விலக்கு ரூ.10,000ல் இருந்து ரூ.25,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என கடந்த 27ம் தேதி கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு கூறி உள்ளார். இதனால் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது.
* வரும் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
* 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
* ஒன்றிய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இது.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு