ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா? : திமுக எம்.பி. வில்சன்

சென்னை : ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா என திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவை திமுக எம்.பி. வில்சன், “தமிழக அரசுடன் மோதல் போக்குடனேயே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தேவையில்லாத விஷயங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டு வருகிறார்.

உள்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் என யாரிடமும் ஆலோசிக்காமல், தனக்கு தோன்றியபடி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. காலையில் ஒரு கடிதம் எழுதுவீர்கள், இரவில் அதை வேண்டாம் என கூறுவீர்கள்.. முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.வழக்குகளை எதிர்கொள்பவர்கள் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றால், ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா? செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தமிழ்நாடு அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

பதவி நீக்க உத்தரவை ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் நிராகரிப்பதே சரியாக இருக்கும்.பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள ஆளுநர், செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநரை, ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்,’என்றார்.

Related posts

கனமழை பெய்யும், நிலச்சரிவு அபாயம்; ஊட்டிக்கு வருவதை தவிர்க்கவும்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 7.50 அதிகரிப்பு

வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்