ஒன்றிய அமைச்சர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு: 2 மணி நேரத்துக்கு பின் கரை திரும்பினர்

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் கடலில் ஒன்றிய அமைச்சர்கள் 2 மணி நேரம் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க ‘சாகர் பரிக்கிரமா’ என்ற யாத்திரையை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை நேற்று குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் முருகன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் ஆகியோர் நேற்று காலையில் 8.30 மணியளவில் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக நேற்று முன்தினமே அவர்கள் திருவனந்தபுரத்தில் வந்து தங்கியிருந்தனர். நேற்று காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் வராமல் கடல் மார்க்கமாக திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பலில் அவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகம் புறப்பட்டு வந்தனர். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் என்பதால் அங்கு சிறு கப்பல்கள் நிறுத்தி வைக்க வசதி இல்லை. இதனால் அமைச்சர்களை வரவேற்று தேங்காப்பட்டணம் துறைமுகம் அழைத்து வர மீனவர்களின் விசைப்படகுகள் சென்றன.

துறைமுகம் அருகே வந்தபோது அங்கு பலத்த காற்று வீசிக்கொண்டு இருந்தது. அலைகளின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பலில் இருந்து, துறைமுகத்தின் உள்ளே வரும் மீன்பிடி படகில் அமைச்சர்கள் ஏற முடியாமல் தவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கடலில் தத்தளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடல் சீற்றம் குறைந்த பின்னர் ஒன்றிய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒன்றிய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீன்பிடி விசைப்படகில் ஏறி தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மீனவர்களுடன் கலந்துரையாடினர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை