மக்கள் குறையைத் தீர்ப்பதில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவதாக, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்துக் கடிதம்..!

சென்னை; மக்கள் குறையைத் தீர்ப்பதில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவதாக, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒன்றிய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சார்பில் 2022ம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 25 வரை நடைபெற்ற நல்லாட்சி வாரம் நிகழ்ச்சியில், மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பினை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். நல்லாட்சி வார நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் கீழ்க்கண்ட முன்னெடுப்புகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புதுமையான முறையில் தீர்வு
    அரியலூரில் உள்ள 32 மாவட்ட விடுதிகளில் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்குவதற்காக FAZER செயலி மூலம் முக அடையாள வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கும், கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார செயல்பாட்டில் மாற்றம், மெய்நிகர் பராமரிப்பு ஆதரவு மற்றும் நிகழ்நேர அறிக்கைகளை வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட “தாய்மையுடன் நாம்” செயலி, கோவையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, கடன்கள் வழங்கப்பட்டதற்கும், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும், 384 ஊராட்சிகளில் உள்ள அரசுக் கட்டடங்களில் 1,525 சுற்றுக் கிணறுகள் அமைக்கப்பட்டு 7 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டதற்காகவும், பொதுமக்களின் குறைகளைக் கண்காணிக்கவும், தீர்த்திடவும் விருதுநகர் மாவட்டத்தில் குரல் வழி, வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் ‘VIRU’ செயலியும், திருநெல்வேலி மாவட்டத்தில், வணக்கம் நெல்லை’யும் அறிமுகப்படுத்தப்பட்டதற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் குறை தீர்வு
    நல்லாட்சி வாரத்தின் போது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வாழ்வாதாரம் வழங்குவது, ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் மனுக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டதற்காகவும், சென்னை மாவட்ட மக்கள் திருப்தியடையும் வகையில் சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டதற்காகவும், கான்கிரீட் வீடுகள் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்த பனப்பள்ளி மலைவாழ் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கொடுக்கப்பட்ட மனுவிற்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் 18 வீடுகள் கட்டித் தரப்பட்டதற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Public Grievance Redress and Monitoring System – CGPRAM) வாயிலாக 32,852 மனுக்களுக்கும், மாநில குறை தீர்க்கும் இணையதளத்தின் வாயிலாக 1,08,658 மனுக்களுக்கும், சேவை வழங்கல் கீழ் 2,92,701 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்- நல்லாட்சி வார நிகழ்ச்சியில் மாநில அரசின் ஒத்துழைப்பிற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்