புதிய வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறதாம் பட்ஜெட்: ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்

சென்னை: புதிய வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட் அமைந்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறினார். தமிழக பாஜ சார்பில் 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்பட பாஜவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசியதாவது:

2047ம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் விதமாக ஒன்றிய பட்ஜெட் அமைந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சி, எதிர்காலம், தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். கடந்த ஆட்சிக் காலங்களில் முன்னுரிமை பெறாத பல அம்சங்களுக்கு, பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால், நமது எண்ணங்கள், வரையறைகள், சவால், உத்திகள் அனைத்தும் உலகளாவியதாக இருக்க வேண்டும்.

அரசு வேலை தான் வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் பலர் தங்களது எண்ணங்களை மாற்றி இப்போது, தனியார் துறையிலும் அதிக சம்பளத்துடன் பணிக்கு செல்கின்றனர். இதேபோல், முத்ரா கடன் திட்டம், விஸ்வகர்மா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டு, மக்கள் பயன்பெற்று கொண்டிருக்கின்றனர்.

இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள பட்ஜெட். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பட்ஜெட் பங்கு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டும் கூட கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு தான் ரயில்வேக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 6 வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை வசதிகள் உள்பட பல திட்டங்கள் தென் மாநிலங்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.

Related posts

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி