மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை கொட்டியது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசியது. கனமழையால் சென்னை மாநகரம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது; சென்னையில் மழை பாதிப்பின் தாக்கம் கடந்த காலங்களை விட குறைவாக உள்ளது. மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. மழை பெய்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2015ல் வெள்ளத்தில் 199 பேர் இறந்தார்கள்; அதை விட அதிக மழை பெய்தாலும் 7 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க் கூடாது.

இதற்காக மிகவும் வருந்துகிறேன். 2015-ல் ஏற்பட்டது செயற்கையான வெள்ளம், தற்போது ஏற்பட்டது இயற்கையாக பெருக்கெடுத்த வெள்ளம். 9 மாவட்டங்களில் 61,666 நிவாரண முகாம்களில் 11 லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 லட்சம் பால் பாக்கெட்டுகள், தேவயைான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடையாறு, கூவம் முகத்துவாரங்கள் புயல் காரணமாக தண்ணீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்னல்களில் இருந்து பொதுமக்கள் வெளிவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

மிககனமழை பெய்தபோதிலும் உடனுக்குடன் மீட்பு பணிகள் நடைபெற்றது. மழையை பொருட்படுத்தாமல் நேற்றே மீட்பு, நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டன. 47 ஆண்டுகள் காணாத பெருவெள்ளத்தில் இருந்து சென்னை தப்பியதற்கு ரூ.4000 கோடியில் வடிகால் அமைக்கப்பட்டதே காரணம். ரூ.4,000 கோடியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் சேதம் குறைந்தது. மழை நீர் வடிகால் பணிகளால்தான் வரலாறு காணாத மழை வெள்ளத்தை நம்மால் சமாளிக்க முடிந்தது. இவ்வளவு பெருமழையின்போதும் வினாடிக்கு 8,000 கனஅடி மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்டது.

வெளிமாவட்டங்களில் இருந்து 5,000 ஊழியர்கள் மீட்பு, நிவாரண பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில இடங்களில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. 75 சதவீத இடங்களில் மின்விநியோகம் சீரானது. மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related posts

இந்து மத கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: பாஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு

ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை