விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வெங்காயம் கையிருப்பை அதிகரிக்கிறது ஒன்றிய அரசு: இன்று முதல் ரூ.25க்கு விற்பனை

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வெங்காய கையிருப்பை 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இன்று முதல் கிலோ ரூ.25க்கு வெங்காய விற்பனை தொடங்கப்பட உள்ளது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு ஜூலையில் அதிகரித்தது. தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு மக்களை வதைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெங்காயம் விலை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதிலிருந்தே விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.

உள்நாட்டு விநியோகத்தை உறுதிசெய்ய, வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி நேற்று முன்தினம் விதிக்கப்பட்ட நிலையில், வெங்காய கையிருப்பை 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில் வெங்காய கையிருப்பு இலக்கு 3 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டு ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதை 5 லட்சம் டன்னாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், என்சிசிஎப் மூலம் இன்று முதல் கிலோ ரூ.25 என்ற விலையில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனையும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 1400 டன் வெங்காயம் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு தடையின்றி கிடைக்கவும் ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு, வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதோடு, நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்