ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் 13 துறைகளில் முதலிடம் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

விருதுநகர்: ‘ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

விழாவில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, 255 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் மானியம் என மொத்தம் ரூ.3.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழக முதல்வர் என்னை துணை முதல்வராக நியமித்த பிறகு சென்னைக்கு வெளியே கலந்து கொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இது. தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ.86 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கிறோம். தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் வீரத்திற்கு பெயர் பெற்ற மாவட்டங்கள், வீர விளையாட்டிற்கும் சிறப்பு பெற்ற மாவட்டங்கள். குறிப்பாக விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை ஊர்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டிகளில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டுமென முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,300 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.38 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி வழங்க இருக்கிறோம்.

விளையாட்டு துறையில் மட்டுமின்றி வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் நிதிஆயோக் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வராக பதவியேற்ற பிறகு தென்மாவட்டத்திற்கு முதல்முறையாக வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* வீரர்களுக்கு கவுரவம் விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பென்சிங் வீரர் ஜிஷோ நிதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைபந்து வீராங்கனை சுந்தரி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் விழா மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருகில் அமர வைக்கப்பட்டனர்.

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!