புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்


இடைப்பாடி: ஒன்றிய அரசு மாநில அரசை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அதிமுக நீர்மோர் பந்தலை, பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இதற்கு முன் பல புயல்கள் வந்துள்ளது. புள்ளி விவரத்துடன் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கேட்டால், குறைத்து தான் கொடுப்பார்கள். எப்போதும் ஒன்றிய அரசு, மாநிலம் கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது. அதிமுக ஆட்சியிலும் பல்வேறு புயல் பாதிப்புகள் வந்தது.

அப்போது நாங்கள் கேட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு எப்போதும் மாநிலத்தை வஞ்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரணம் என்று இரண்டு வகைகள் உள்ளது. இவற்றை எப்படி வழங்கலாம் என்று, ஒன்றிய அரசு ஒரு வரைமுறை வைத்துள்ளது. அதை மட்டும் தான் அவர்கள் கொடுப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு ரத்து குறித்து, முழுமையான தீர்ப்பு வந்த பிறகு கருத்து கூறுகிறேன்.

தேர்தல் முடிவு வந்த பிறகே, தேசிய கட்சிகளுக்கு ஆதரவு, கட்சியில் மாற்றம் போன்றவை குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. அதனால் நீதிமன்றம் சார்ந்த கேள்விகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் குறித்த ேகள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை, தனிமனிதர்கள் மீதான தாக்குதலை எப்போதும் விரும்புவதில்லை. நாட்டில் நடக்கும் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு சேர்த்து, தீர்வு காண்பதே நல்ல எதிர்க்கட்சியின் பணியாகும். அதை அதிமுக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை