கேரளா உட்பட எந்த மாநிலத்தையும் ஒன்றிய அரசு புறக்கணிக்கவில்லை: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: கேரளா உட்பட எந்த மாநிலத்தையும் வாக்குகள் அடிப்படையில் ஒன்றிய அரசு புறக்கணிக்கவில்லை என்று திருவனந்தபுரத்தில் நடந்த பாஜ கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கேரள மாநில பாஜ தலைவர் சுரேந்திரன் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பாதையாத்திரை நடத்தினார். இதன் நிறைவு விழா நேற்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்.

இந்தியாவை உலகின் மூன்றாவது சக்தியாக உயர்த்துவது தான் பாஜவின் லட்சியமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ அரசு 25 கோடி மக்களை வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளது. மேலும் கோடிக்கணக்கானோரை வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களது உறுதி மொழியாகும். கேரளா உள்பட எந்த மாநிலத்தையும் வாக்குகள் அடிப்படையில் ஒன்றிய அரசு புறக்கணிக்கவில்லை. கேரள அரசு எங்களுடன் ஒத்துழைக்காவிட்டாலும் இந்த மாநிலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தடை இல்லாமல் நிறைவேற்றி வருகிறோம்.

காங்கிரசைப் போலவே கம்யூனிஸ்ட் கட்சியிலும் குடும்ப அரசியல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு வாக்கு சதவீதம் இரட்டை இலக்கங்களில் கிடைத்தது. ஆனால் இம்முறை கேரளாவில் பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கேரளாவின் பங்களிப்பும் இருக்கும்.

கேரளாவுக்குள் தான் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மோதிக் கொள்கின்றன. கேரளாவைத் தாண்டினால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். காங்கிரசும், கம்யூனிஸ்டும் சேர்ந்து கேரளாவை ஊழல் மற்றும் அக்கிரமங்களின் மாநிலமாக மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார். நேற்றைய நிகழ்ச்சியில் கேரள அரசின் முன்னாள் தலைமைக் கொறடா பி.சி. ஜார்ஜ் தன்னுடைய ஜனபக்ஷம் கட்சியை பிரதமர் மோடி முன்னிலையில் பாஜவுடன் இணைத்தார்.

Related posts

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு