பாஜ ஆட்சி அமைந்த பிறகு தமிழக வளர்ச்சிக்கு அதிக நிதி ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது: பல்லடத்தில் பிரதமர் பேச்சு

திருப்பூர்: ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கொங்கு பகுதியான இது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஜவுளித்தொழிலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை தேசத்தை கட்டமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும். 2024-ம் ஆண்டு தமிழகம் அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 2024-ம் ஆண்டு அமைய உள்ள ஆட்சியில், தமிழகம் துடிப்பான மாநிலமாக உருவெடுத்துள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்திற்கு மக்களிடம் பேராதரவு கிடைத்து இருக்கிறது. என்னை பொறுத்த அளவில் தமிழ் மொழியும், கலாசாரமும் முக்கியமானது. ஐ.நா. சபையில் நான் பேசும்போது தமிழ்க்கவிதையை படித்தேன்.

அதுபற்றி உலக அளவில் என்னிடம் கேட்கிறார்கள். காசியில், காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடத்தினேன். அதைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். தமிழகத்துடனான எனது தொடர்பு அரசியல் ரீதியானது அல்ல. அது என்னுடைய இதயத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் பாஜ ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், பாஜவின் இதயத்தில் தமிழகம் எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒன்றியத்தில் இருக்கும் பாஜ அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் உதவிகரமாக இருந்து வருகிறது.

தற்போது பாஜ அரசு தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. பாஜ ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியின் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஏழைக்கு இலவச அரிசி, இலவச கியாஸ் சிலிண்டர், வீடு கட்ட நிதி வழங்கி வருகிறோம். மோடியின் உத்தரவாதம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானது. தமிழகம் வந்திருக்கும் நான் எம்ஜிஆரை நினைவு கூறுகிறேன். என்னுடைய இலங்கை பயணத்தின் மூலம் அவர் பிறந்த கண்டியை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

இப்போது அவர் பணியாற்றிய மண்ணுக்கு வந்துள்ளேன். தரமான கல்வி, சுகாதாரத்தை அவர் கொடுத்துள்ளார். தமிழக மக்கள் எப்போதும் தேசத்தை உயர்த்தி பிடித்திருக்கிறார்கள். நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் வருகிறது. ஜவுளித் துறையை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில், தமிழகத்துக்கு அதிக பலன் இருக்கும். ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். விருதுநகரில் பிரதமர் மித்ர ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. பாஜ தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது பற்றியும், வளர்ச்சி அடைந்த பாரதத்தை பற்றியும், 3-வது வளர்ந்த நாடாக உருவாக்குவது பற்றியும் பேசி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது