ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

* 3 ஆண்டாக விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை வழங்க வேண்டும்

* தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டதுக்கு ஒப்புதல்

* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி

சென்னை: ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும், 3 ஆண்டாக விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாளை நடப்பு நிதியாண்டிற்கான (2024-2025) ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இக் கூட்டத்தொடரில் 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட 6 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது. மேலும் ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு, அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் இதில் பல்வேறு கேள்விகளை கேட்டு ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள 2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024ல் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை