ஒன்றிய அரசு அதிகாரிகள் தவறு செய்து பிடிபட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை : ஒன்றிய அரசு அதிகாரிகள் தவறு செய்து பிடிபட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிந்த வழக்கை காட்டி மிரட்டி, அவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 1ம் தேதி கைது செய்தனர். அங்கித் திவாரிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”ஒன்றிய அரசு அலுவலர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது கைது செய்ய மாநில போலீசுக்கு முழு அனுமதி உள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் அலுவலகம், வீடுகளில் சோதனையிடவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது,”என்றார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ஒன்றிய அரசு அதிகாரிகள் தவறு செய்து பிடிபட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல. அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அணுகுமுறை சட்டரீதியானது. லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்படுபவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்வது விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான். லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல.மனுதாரர் கோரிக்கையின்படி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியது என்பது தேவையற்ற ஒன்று. அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தடை இல்லை. தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டனர்.

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது