ஒன்றிய பாஜ அரசின் 3 சட்ட திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: 3 குற்றவியல் சட்டங்களை திருத்தி, இந்தியை திணிக்கிற ஒன்றிய பாஜ அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய சட்டங்களின் பெயர்களை, அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தி மசோதாவை நிறைவேற்றியது. இதில், இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு IPC என்பதை பாரதிய நியாய சன்ஹிதா 2023 என்றும், கிரிமினல் புரொசிஜர் கோட் 1973 என்பதை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா 2023 எனவும், இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872 என்பதை பாரதிய சாக்ஷயா அதிநயம் 2023 என்ற பெயரில் திருத்தம் செய்துள்ளது.

இந்த சட்டத் திருத்தங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக, சார்பு நீதிமன்ற வாயிலில் ஒன்றிய நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று மாநிலம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே பேரணியாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு