ஒன்றிய அரசு 2022ம் ஆண்டிற்கு வழங்கிய நீலகிரிக்கு காசநோய் இல்லா நிலைக்கான பதக்கம்: முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து

சென்னை: 2025க்குள் காசநோயை ஒழித்து, காசநோய் இல்லாத தமிழ்நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டாண்டுகளாக காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளை பாராட்டும் வகையில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் கடந்த 24ம் தேதி, வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவதற்காக 2022ம் ஆண்டிற்கான தங்கப் பதக்கங்கள் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கும், வெள்ளிப் பதக்கங்கள் மதுரை, தூத்துக்குடி, கரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், வெண்கலப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் காசநோய் இல்லாத நிலையை 3 மாவட்டங்கள் மட்டுமே எய்தியுள்ளன. அதில் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. காசநோய் இல்லாத நிலைக்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் 2022ம் ஆண்டுக்கான காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவதற்காக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு