ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையில் 8 இடங்களில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கைது

சென்னை: ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் 8 இடங்களில் நேற்று ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது ெசய்யப்பட்டனர். ஒன்றிய பாஜ அரசின் தவறான மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி மற்றும் கோதுமைக்கு ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை சென்னை மூலக்கடை யூகோ வங்கி முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதேபோல், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் தலைமையிலும், திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையிலும், கிண்டி ரயில் நிலையத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் அருகே கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையிலும் போராட்டம் நடந்தது.

இந்த மறியல் போராட்டத்தில், ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. சென்னையில் 8 இடங்களில் நடந்த ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தின் இறுதியில் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்களை விடுவித்தனர். இதுபோல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு